ஓசூர்: என்டிஏ என்பது தமிழ்நாட்டை மதத்தால் துண்டாடும். பாஜ என்பது ஒரு அழிவு சக்தி. சங்கிப்படை உள்ளே நுழைந்தால் சர்வ நாசம்தான் என்று ஓசூர் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக பேசினார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அந்திவாடி விளையாட்டு அரங்கு அருகில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் ஓசூர் திமுக வேட்பாளர் சத்யா, தளி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ராமச்சந்திரன், வேப்பனஹள்ளி திமுக வேட்பாளர் சீனிவாசன், பர்கூர் திமுக வேட்பாளர் மதியழகன் எம்எல்ஏ, கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர். செல்லக்குமார், ஊத்தங்கரை(தனி) தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் குப்புசாமி ஆகியோரை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
இரண்டு நாட்களுக்கு முன்பு, தமிழ்நாட்டின் உரிமைகளைத் திமுக.வால் மட்டும்தான் காப்பாற்ற முடியும் என்று நிரூபித்துவிட்டு, உங்கள் முன்னால் கெத்தாக நின்று கொண்டிருக்கிறேன். காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மரியாதைக்குரிய மல்லிகார்ஜுன் கார்கே அவர்கள் வந்திருக்கிறார். நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி இந்த அளவிற்கு வலிமையாகத் தொடர அடித்தளமாக இருக்கும் மூத்த தலைவர்! அதேபோன்று, நேற்று அன்பிற்கினிய சகோதரர் ராகுல் காந்தி அவர்களும், தமிழ்நாடு வந்து பிரசாரம் செய்துவிட்டுச் சென்றிருக்கிறார்.
அவர் பிரசாரம் செய்யும்போது ஒன்றை குறிப்பிட்டுச் சொன்னார். “இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை மோடி அவர்களால் கண்ட்ரோல் பண்ணவே முடியாது. அதனால்தான் அடிமை அ.தி.மு.க. ஆட்சியைத் தமிழ்நாட்டில் நிறுவ வேண்டும் என்று பார்க்கிறார்” என வலிமையாகப் பேசிவிட்டுச் சென்றிருக்கிறார். நான் கோவையில் பரப்புரைக்குச் சென்றபோது, நம்முடைய சகோதரர் ராகுல் அவர்கள், திருவள்ளூர் மற்றும் டெல்டாவிற்கு வந்திருக்கிறார்.
நான் நாளைக்குச் சென்னையில் பிரசாரம் செய்யும்போது, அவர் தென்கோடியில் குமரியில் பிரசாரத்தில் இருப்பார். சுற்றிச் சுற்றி நானும் என் சகோதரர் ராகுல் காந்தி அவர்களும் அனைத்துத் திசைகளிலும் நம்முடைய கூட்டணியின் வெற்றியை உறுதிப்படுத்திக் கொண்டு வருகிறோம். அதற்கு மேலும் வலிமை சேர்க்க வந்திருக்கும் மரியாதைக்குரிய கார்கே அவர்களுக்கு உங்கள் அனைவரின் சார்பில் முதலில் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
தமிழ்நாட்டு உரிமைகளுக்காகப் பா.ஜவிடம் குரல் கொடுக்க வக்கில்லாத பழனிசாமி, என்னைப் பார்த்து என்ன கேட்டிருக்கிறார்? நான் காரில் செல்லும்போது கிரிக்கெட் பார்த்தது தப்பாம். பழனிசாமி அவர்களே… காரில் செல்லும்போது கர்ச்சீப் வைத்து முகத்தை மூடிக் கொண்டு சென்றீர்களே? அதுதான் கேவலம். இன்னொன்றும் சொல்லியிருக்கிறார். “ஒரு முதலமைச்சர் கிரிக்கெட் பார்க்கலாமா?” என்று கேட்டிருக்கிறார். முதலமைச்சர் கிரிக்கெட் பார்ப்பது தவறில்லை.
முதலமைச்சராக இருந்து கொண்டு, “தூத்துக்குடியில் 13 அப்பாவிகளைச் சுட்டுக் கொன்றதையே டி.வி.யில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன்” என வெட்கமே இல்லாமல் சிரித்துக் கொண்டே சொன்னீர்களே, அதுதான் மாபெரும் தப்பு, மிகப்பெரிய கேவலம். பழனிசாமியின் ஓனர் பிரதமர் மோடி அவர்கள், நேற்று இரவு எட்டு மணிக்கு, தொலைக்காட்சியில் பேசியிருக்கிறார். அதை பிரதமர் மோடியின் உரை என்று சொல்வதைவிட, பாஜ தலைவர் மோடி அவர்களின் அரசியல் உரை என்றுதான் சொல்ல வேண்டும்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது, தேசியக் கொடியின் பின்னணியில், வார்த்தைக்கு வார்த்தை எதிர்க்கட்சிகளைத் திட்டி அவர் பேசியிருக்கிறார். தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேச வேண்டியதை எல்லாம் அரசு சார்பான உரையில் பேசியிருக்கிறார். இது அப்பட்டமான விதிமீறல். தொகுதி மறுவரையறை சட்ட விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் முதல் முறையாகத் தோல்வியடைந்த பதற்றத்தில் அவர் இப்படியெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார். தேர்தலுக்கு நடுவில் இந்தக் கருப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தால் நாம் அசால்ட்டாக விட்டுவிடுவோம் என்று நினைத்தார்.
ஆனால், அப்படியே உல்டாவாக நடந்துவிட்டது. தென் மாநில மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள். அவருடைய கூட்டணிக்குப் படுதோல்வி உறுதியாகியிருக்கிறது. அதனால், டேமேஜ் கண்ட்ரோல் செய்ய இப்போது என்ன முயற்சி செய்கிறார்? மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கட்சிகள் தடுக்கிறார்கள் என்று அபாண்டமாகப் பேசியுள்ளார். இதுவும் வேலைக்கே ஆகவில்லை. தேர்தல் நேரத்தில் அவர் நம் மீது ஏவ நினைத்த அஸ்திரம் இப்போது பூமராங் ஆகி அவருக்கே வினையாகிவிட்டது. முதலுக்கே மோசமாகிவிட்டது.
மோடி அவர்களே “இட்ஸ் டூ லேட்’’. ஏப்ரல் 17ம் தேதியோடு என்டிஏ கூட்டணியின் சாப்ட்டர் க்ளோஸ் ஆகிவிட்டது! பாஜ கூட்டணிக்கு மெஜாரிட்டி இருக்கும் நாடாளுமன்றத்திலேயே என்டிஏ கூட்டணியை நிலைகுலைய வைத்திருக்கிறோம். அப்போது, பாஜவுக்கு அட்ரஸே இல்லாத தமிழ்நாட்டில் என்ன நிலைமை ஆகும் என்று மட்டும் எண்ணிப் பாருங்கள். நாடாளுமன்றத் தேர்தலில் 40-க்கு 40 வெற்றியைக் கொடுத்தீர்கள். அதை வைத்து என்ன செய்ய முடியும் என நம்முடைய எம்.பி.க்கள் நேற்று முன்தினம் நாட்டுக்கே காட்டிவிட்டார்கள்.
அதனால் சட்டமன்றத் தேர்தலிலும், அப்படி ஒரு முழு வெற்றிக்காகத்தான் நான் என் சக்திக்கு மீறிப் பிரசாரம் செய்கிறேன். 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றால்தான் தமிழ்நாட்டைச் சுற்றிச் சுற்றி வரும் ஆபத்துகளிலிருந்து பாதுகாக்க முடியும். பாஜ உள்ளே வந்துவிடும் என்று சொல்வது ஏதோ பேச்சுக்குச் சொல்வதில்லை. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியைத் தவிர்த்து வேறு யாருக்கு வாக்களித்தாலும், அது நேரடியாகப் பாஜவுக்குப் போடும் வாக்குதான்.
தப்பித் தவறி அவர்கள் வந்தால், நான் இவ்வளவு நேரம் தொண்டை வலிக்கப் பட்டியல் போட்ட சாதனைத் திட்டங்களை எல்லாம் நிறுத்திவிடுவார்கள். தமிழ்நாடு முழுவதும் மதக்கலவரம் செய்வது மட்டும்தான் காலங்காலமாக அவர்களுடைய ஒரே அஜெண்டா.தஞ்சாவூரிலும், மதுரையிலும்கூட இப்போதே அதைச் செய்யப் பார்த்தார்கள். இப்படிப்பட்டவர்களிடம் ஆட்சி போனால் என்ன நடக்கும் என்று நாம் கற்பனை செய்தெல்லாம் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. உத்தரப் பிரதேசம், பீகார், மணிப்பூர் எனக் கண் முன்னாலேயே நிறைய எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன.
நேரடியாகவும் சரி, மாநிலக் கட்சிகள் மூலமாக மறைமுகமாகவும் சரி, பாஜ. உள்ளே புகுந்து உருப்பட்ட ஒரு மாநிலம்கூட இந்தியாவில் கிடையாது. சங்கிப்படை உள்ளே நுழைந்தால் சர்வ நாசம்தான்! அப்படி ஒரு கட்சியின் கூட்டணிக்குத் தமிழ்நாட்டின் நலன் மீது அக்கறை உள்ளவர்களின் ஒரு வாக்குகூட விழக் கூடாது. தி.மு.க. அரசு இருப்பதால்தான் தமிழ்நாடு காப்பாற்றப்படுகிறது. திமுக அரசு இருப்பதால் மட்டுமே தமிழ்நாடு காப்பாற்றப்படுகிறது. தமிழ்நாட்டில் இருக்கும் கட்சிகளுக்குள் எத்தனையோ கருத்து வேறுபாடுகள், கொள்கை வித்தியாசங்கள் இருக்கலாம்.
ஆனால், எந்தக் கட்சியும் மக்களைப் பிரித்து வன்முறையைத் தூண்டிவிட்டு அதில் குளிர் காய மாட்டார்கள். ஆனால், பாஜ அப்படி அல்ல. பாஜ என்பது ஒரு அழிவு சக்தி. அதை உள்ளே விட்டால் நம்முடைய மாநிலமும் இருக்காது. மாநிலக் கட்சிகளும் இருக்காது. என்டிஏ என்பது தமிழ்நாட்டை மதத்தால் துண்டாடும். இந்தியைத் திணிக்கும். தொகுதி மறுவரையறையினால் தமிழ்நாட்டு மக்களை அதிகாரமற்ற அகதிகள் ஆக்குவார்கள். ஜம்மு காஷ்மீர், புதுச்சேரி போன்று, யூனியன் பிரதேசம் ஆக்கி அராஜகம் செய்யும். அதனால்தான் சொல்கிறேன்…
தமிழ்நாடு வெர்சஸ் என்டிஏ எனும் இந்த ஜனநாயகப் போரில், தனிப்பட்ட அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, நம்முடைய தாய்த் தமிழ்நாட்டைக் காக்க, மேடையில் இருக்கும் வேட்பாளர்கள் அத்தனை பேருக்கும் அவரவர்களுக்கு உரிய சின்னங்களில் வாக்களித்து, நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியைத்தான் ஆதரிக்க வேண்டும். நாடு வளம் பெற – நல்லாட்சி தொடர்ந்திட, தமிழ்நாடு தமிழ்நாடாகவே என்றும் இருக்க, ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை! தமிழ்நாடு வெல்லட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்! இவ்வாறு அவர் பேசினார்.
* இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை மோடி அவர்களால் கண்ட்ரோல் பண்ணவே முடியாது. அதனால்தான் அடிமை அ.தி.மு.க. ஆட்சியைத் தமிழ்நாட்டில் நிறுவ வேண்டும் என்று பார்க்கிறார்” என ராகுல்காந்தி வலிமையாகப் பேசிவிட்டுச் சென்றிருக்கிறார்.
* நாடாளுமன்றத் தேர்தலில் 40-க்கு 40 வெற்றியைக் கொடுத்தீர்கள். அதை வைத்து என்ன செய்ய முடியும் என நம்முடைய எம்.பி.க்கள் நேற்று முன்தினம் நாட்டுக்கே காட்டிவிட்டார்கள்.
