விருதுநகர்: விருதுநகர் அருகே நேற்று பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 23 தொழிலாளர்கள் உடல் கருகி பலி ஆயினர். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர். விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி உட்பட சுற்றுவட்டாரங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. நேரடியாக ஒரு லட்சம் பேர், மறைமுகமாக 2 லட்சம் பேர் வரை பணியாற்றி வருகின்றனர். விருதுநகர் அருகே வி.முத்துலிங்காபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கட்டனார்பட்டியில் வனஜா பட்டாசு ஆலை உள்ளது.
டிஆர்ஓ உரிமம் பெற்ற இந்த ஆலையில் மொத்தம் 10 அறைகள் உள்ளன. இந்த ஆலையில் புஸ்வாணம், சங்கு சக்கரம் முதலான சிறிய ரக வெடிகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆலையில் விடுமுறை நாளான நேற்று மொத்தம் 36 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். பிற்பகல் 3.10 மணியளவில், பட்டாசு தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் வைத்திருந்த அறைப்பகுதியில் விதி மீறி தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது மருந்து உராய்வின் காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் அந்த அறை வெடித்து சிதறியது. இதனைத்தொடர்ந்து அருகே இருந்த மற்ற 3 அறைகளுக்கும் தீ பரவியது. இதில் 4 அறைகளும் முற்றிலும் சேதமடைந்தன.இதுகுறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சிவகாசி, சாத்தூர், விருதுநகர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சவந்து சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த வெடிவிபத்தில் உடல் கருகியும், கட்டிட இடிபாடுகளில் சிக்கியும் 23 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த சேர்வைக்காரன் பட்டியைச் சேர்ந்த பேச்சியம்மாள் (51), சாரதா (40), அருண்குமார் (23), வீரபத்ரபன் (45), சங்கிலி தங்கம் (40) மற்றும் திருத்தங்கல்லைச் சேர்ந்த பஞ்சவர்ணம் (56), ஆகியோர் மீட்கப்பட்டு, விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் உடல் கருகி உயிரிழந்த தொழிலாளர்கள் யாரென்பதை அடையாளம் காணமுடியவில்லை.
அதில் 8 பேரின் உடல்கள் ஆணா, பெண்ணா என்றும் தெரியவில்லை. மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அச்சம் எழுந்துள்ளது. தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த பயங்கர பட்டாசு ஆலை விபத்தால் சுமார் 6 கிமீ தூரத்திற்கு பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டது. விபத்து நடந்த இடத்தில் மதுரை சரக டிஐஜி அபினவ் குமார், கலெக்டர் சுகபுத்ரா, எஸ்பி ஸ்ரீநாதா, ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் விருதுநகர் எம்எல்ஏ ஏஆர்ஆர்.சீனிவாசன், விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் ஆகியோர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களை அமைச்சர்கள் உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். 36 பேர் பணியில் இருந்ததால் அவர்களில் யாரேனும் தப்பித்தனரா அல்லது இடிபாடுகளில் சிக்கியுள்ளனரா என தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.
* முதல்வர் இரங்கல்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலர் உயிரிழந்துள்ள துயரச் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். மீட்புப் பணிகளை விரைவுபடுத்திக் கண்காணிக்கவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறவும் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரையுமாறு அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோரைக் கேட்டுக்கொண்டுள்ளேன். இதுகுறித்து அறிந்ததுமே மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு, தேவைப்படும் அனைத்து உதவிகளையும் ஒருங்கிணைக்க அறிவுறுத்தியுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
* மீட்புப்பணியின் போது மீண்டும் விபத்து: போலீசார் உள்பட 12 பேர் காயம்
வெடிவிபத்து நடந்த பகுதியில், கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை ஜேசிபி இயந்திரம் மூலம் மீட்கும் பணி நேற்று இரவு 7:20 மணிக்கு நடந்து கொண்டிருந்தது. இதற்காக பெரிய விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. அதன் அருகே தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
கட்டிட இடுபாடுகளை அகற்றியபோது, அதனடியில் சிக்கி இருந்த பட்டாசுகள் எதிர்பாராதவிதமாக திடீரென வெடித்து சிதறியதில் பெரிய தீப்பிழம்பு ஏற்பட்டது. அதில் இருந்து, கற்கள் வெடித்து நாலாபுறமும் சிதறின. இதனால் அங்கிருந்த கலெக்டர், எஸ்பி, போலீசார் மற்றும் செய்தியாளர்கள் தப்பியோடினர். இதில் தீயணைப்பு வீரர்கள், போலீசார் உட்பட 12 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
* ‘ஆணையத்தின் அனுமதி பெற்று நிவாரண உதவி’
அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கட்டனார்பட்டி பட்டாசு ஆலை விபத்து துரதிர்ஷ்டவசமானது. தேர்தல் நேரம் என்பதால் நிவாரணம் வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவு பெற்று, முதலமைச்சர் நடவடிக்கைகளை எடுப்பார். விதிமீறலால் இந்த விபத்து நடந்துள்ளது தெரிய வருகிறது’’ என்றார்.
விபத்து குறித்து கலெக்டர் சுகபுத்ரா கூறுகையில், ‘‘விடுமுறை நாளான இன்று (நேற்று), பட்டாசு உற்பத்தி செய்ய தொழிலாளர்களை ஈடுபடுத்தியது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். விருதுநகர் எஸ்பி ஸ்ரீநாதா, கூறுகையில், ‘‘இந்த விபத்து குறித்து விசாரிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும். விதிமுறை மீறல் இருப்பின் கண்டறியப்பட்டால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
