சென்னை: ஒன்றிய அரசு கொண்டு வந்த மசோதா அரசின் துணிச்சலான முயற்சிக்கு கிடைத்த உண்மையான தோல்வி என்று காரைக்குடியில் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூரில் பிரசாரத்தில் ஈடுபட்ட முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் நேற்றிரவு கூறுகையில், ‘‘2024 தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கவே வாக்களித்தனர். திமுக தலைமையிலான கூட்டணி 39 இடங்களிலும் வெற்றி பெற்றது.
பாஜக கூட்டணிக்கு ஓரிடம் கூட கிடைக்க வில்லை. அரசியல் சாசனம் திருத்த பாஜகவிற்கு போதிய பலம் இல்லை என்று மக்கள் நம்பினர். மக்களின் நம்பிக்கைக்கு மாறாக, இரண்டு ஆண்டுகள் கழித்து அரசியல் சாசனத்தைத் திருத்த இப்போது அரசு முயன்றது. இந்தியா கூட்டணி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 39 நாடாளுமன்ற உறுப்பினர்களும் டெல்லியில் ஒருங்கிணைந்து இந்த மசோதாவைத் தோற்கடித்தனர்.
இதன் மூலம் அம்பேத்கர் இயற்றிய அரசியல் சாசனம் காப்பாற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேறி இருந்தால் சிறுபான்மையினரின் உரிமைகள் பறிக்கப்பட்டிருக்கும். வக்ஃபு சட்டங்களில் மாற்றங்கள் வந்திருக்கும். மக்களின் பேச்சுரிமை மற்றும் எழுத்துரிமை நசுக்கப்பட்டிருக்கும். தொடர்ச்சியாக மேலும் பல அரசியல் சாசனத் திருத்தங்கள் செய்ய வழி வகுத்திருக்கும். இது அரசின் தோல்வி என கூற மாட்டேன். அரசினுடைய துணிச்சலான முயற்சிக்கு கிடைத்த உண்மையான தோல்வி. இது வரவேற்கத்தக்க தோல்வி’’ என கூறினார்.
