திருப்பூர்: சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஆண்டிபாளையம் படகு இல்லத்தில் படகில் பயணம் செய்து மாவட்ட கலெக்டர் மனிஷ் தொடங்கி வைத்தார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட தாராபுரம் (தனி), காங்கயம், அவிநாசி (தனி), திருப்பூர் (வடக்கு), திருப்பூர் (தெற்கு), பல்லடம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது.
இதற்காக மாவட்டம் முழுவதும் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று ஆண்டிபாளையம் படகு இல்லத்தில் மாவட்ட கலெக்டர் மனிஷ் படகில் பயணம் செய்து தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க கோரி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கமித்திரை, சுற்றுலா அலுவலர் அரவிந்த்குமார், விளையாட்டு அலுவலர் ரகுக்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி இயக்குநர் (பயிற்சி) ஹர்சா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
