மோடி அரசு கொண்டு வந்த கருப்புச் சட்டம் படுதோல்வி டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு; ஆணவ பாஜவின் வீழ்ச்சியை, நாம் தொடங்கி வைத்திருக்கிறோம்

* தேர்தலுக்கு முன்பே மண்ணை கவ்விய என்.டி.ஏ கூட்டணி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

தேனி: மோடி அரசு கொண்டு வந்த கருப்புச் சட்டம் படுதோல்வி அடைய செய்து டெல்லியை தமிழ்நாடு வீழ்த்தி உள்ளது. ஆணவ பாஜவின் வீழ்ச்சியை, நாம் தொடங்கி வைத்திருக்கிறோம். தேர்தலுக்கு முன்பே என்.டி.ஏ கூட்டணி மண்ணை கவ்வி உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே கண்டமனூர் விலக்கில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நேற்று பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.

இதில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பேசியதாவது: இன்றைக்கு நாம் எதிர்கொண்டிருப்பது தேர்தல் களம் மட்டுமல்ல; போர்க்களம். தமிழ், தமிழினம், தமிழ்நாடு இந்தச் சொற்களைக் கேட்டாலே கசக்கும் கூட்டம். நம்முடைய குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கக் கூடாது என்று சதி வேலையைச் செய்திருக்கிறார்கள். இந்தியாவில் குறிப்பிட்ட சில மாநிலங்களில் மதவெறியை வளர்த்து, அதன் மூலமாக இந்த நாட்டை ஆள்வதற்குப் பாசிச பாஜ செய்திருக்கும் சூழ்ச்சிதான், தொகுதி மறுவரையறை.

இந்தச் சதிக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று (நேற்று முன்தினம்) நான் கருப்புக் கொடி ஏற்றினேன். தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டித் தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார்கள். தமிழ்நாடு மக்களின் பிரதிநிதியாக முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும் என்னுடைய எதிர்ப்பு என்பது, ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்ப்பு. இதை நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டு, டி.ஆர்.பாலு பேசினார்.

அதற்கு, மக்களவைத் தலைவராக அனைவருக்கும் பொதுவானவராக நடந்து கொள்ள வேண்டிய சபாநாயகர் ஓம் பிர்லா அவர்கள், ‘‘நீங்கள் கருப்புக் கொடி ஏற்றினால் என்ன? நீலக்கொடி ஏற்றினால் என்ன?’’ என்று ஆணவத்தோடு பேசியிருக்கிறார். அவர் தனிப்பட்ட ஸ்டாலினை அவமதிக்கவில்லை; தமிழ்நாட்டின் குரலை – உணர்வுகளை ஏளனப்படுத்திப் பேசினார். இன்றைக்கு அதற்கான பதிலடியை கனிமொழி நாடாளுமன்றத்தில் தந்திருக்கிறார்.

தமிழர்களை அவமதிப்பதை மட்டுமே தங்களுடைய நோக்கமாக வைத்துப் பேசும் பாஜவின் குரலாக இருக்கும் ஓம் பிர்லா அவர்களுக்குத் தெளிவாகச் சொல்கிறேன். இந்த மண்ணில் சமத்துவம், சமூகநீதி, பொதுவுடைமைக்கான, கருப்பு, சிவப்பு, நீலக் கொடிகள்தான் பறக்கும். இன்னும் சொல்கிறேன் திமுக இருக்கும் வரை உங்களுடைய காவிக் கொடி ஒருபோதும் இங்கே பறக்காது. தன்மானமுள்ள தமிழர்கள் பறக்கவும் விடமாட்டார்கள். நல்ல செய்தி வந்திருக்கிறது. தமிழ்நாட்டுக்கு எதிராக கருப்புச் சட்டம் கொண்டுவந்தார்கள் அல்லவா?

அவர்கள் கொண்டுவந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டு, நாம் அதில் வெற்றி பெற்றிருக்கிறோம். இந்த வெற்றி வெறும் டிரெய்லர்தான், அடுத்து நாம் பெறவிருக்கும் வெற்றிதான் மாபெரும் வெற்றி. டெல்லியை தமிழ்நாடு வீழ்த்தி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து திண்டுக்கலில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நேற்றிரவு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

வெற்றிச் செய்தியோடு வெடியை போட்டுவிட்டுத்தான் இங்கே வந்திருக்கிறேன். தேர்தலுக்கு முன்பே, என்டிஏ கூட்டணி மண்ணை கவ்வியிருக்கிறது. இது சாதாரண வெற்றியல்ல; இன்னும் 100 ஆண்டுகள் கழித்தும், வரலாற்றில் நின்று பேசப் போகும் வெற்றி. ஆணவ பா.ஜ.க.வின் வீழ்ச்சியை, தமிழ்நாடு தொடங்கி வைத்திருக்கிறது. தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும் என்று

சொன்னேன். இன்று, தமிழ்நாடு வென்றிருக்கிறது. அனைவரும் சொல்லுங்கள். வெல்க வெல்க வெல்கவே… தமிழ்நாடு வெல்கவே! வெல்க வெல்க வெல்கவே.. அரசியல் சட்டம் வெல்கவே! நன்றி. எதிர்க்கட்சிகள் என்னவெல்லாம் சொன்னார்கள் கருப்புக் கொடி ஏற்றினால் கருப்புச் சட்டை போட்டால் முடியுமா என்று கேட்டார்கள். இப்போது ஒரே போடாக போட்டுவிட்டோமா இல்லையா? ஆனால், இதெல்லாம் அவர்களுக்கு போதாது.

ஏப்ரல் 23 தேர்தலில் நீங்கள் அடிக்கப் போகும் அடியிருக்கிறதே, அதுதான் ரியல் அடி! இந்தியா முழுவதும் இருக்கும் காவிக்கறை துடைத்தெறியப்படும் தொடக்க அடி! அதுவும், தமிழ்நாட்டில் இருந்துதான் தொடங்கப் போகிறது. இனிமேலாவது, தேவையில்லாமல் தமிழ்நாட்டை உரசிப் பார்க்காதீர்கள். தாங்க மாட்டீர்கள். பிரதமர் மோடி அவர்கள், தன்னுடைய 12 ஆண்டு கால ஆட்சியில் சந்தித்திருக்கும் முதல் தோல்வி மாபெரும் தோல்வி இது! தேர்தலுக்கு முன்பே, தமிழினத் துரோகி எடப்பாடி சந்தித்திருக்கும் படுதோல்வி இது!

தேர்தல் நேரத்தில் இதுபோன்ற சட்டம் கொண்டு வந்தால், தமிழ்நாட்டில் அனைவரும் அசால்ட்டாக இருந்து விடுவோம் என்று நினைத்தார்கள். தமிழ்நாடு எப்போதுமே அலர்ட்டாகதான் இருக்கும்! ஏன் என்றால், இங்கிருப்பது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். தமிழ்நாடு முதலமைச்சராக இந்த ஸ்டாலின் பற்ற வைத்த தீ, டெல்லியின் ஆணவத்தை சுட்டெரித்திருக்கிறது! நம்முடைய போராட்டம் வெற்றி பெற்றிருக்கிறது.

கருஞ்சட்டைப் படை காவிப்படையை வீழ்த்தியிருக்கிறது. மகளிர் இடஒதுக்கீடு என்று முகமூடி போட்டு, தொகுதி மறுவரையறைக்காக பாஜ. கொண்டு வந்த மசோதாவை இந்தியா கூட்டணியைச் சேர்ந்த எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து, இன்று தோல்வியடைய வைத்திருக்கிறார்கள். கருப்பு சட்டத்திற்கு எதிராக வாக்களித்த அனைத்து எம்பிக்களுக்கும் அந்தக் கட்சிகளின் தலைவர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களின் சார்பில் இங்கிருக்கும் உங்கள் அனைவரின் சார்பில் என்னுடைய கோடான கோடி நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

மகளிருக்கான இடஒதுக்கீட்டை முதன்முதலாக உள்ளாட்சியில் கொடுத்தது, தி.மு.க.! இந்த ஸ்டாலின் ஆட்சியில், தமிழ்நாடு உள்ளாட்சியில் 50 சதவீத மகளிர், பொறுப்புகளில் இருக்கிறார்கள். 1973ல் நான் ‘திண்டுக்கல் தீர்ப்பு’ என்ற நாடகத்தில் நடித்தேன். இன்றைக்குத் திண்டுக்கல் வந்த நேரத்தில் தமிழ்நாட்டிற்கு சிறந்த தீர்ப்பு கிடைத்திருக்கிறது. 40 பேர் டெல்லிக்குச் சென்று, என்ன செய்கிறார்கள்? என்று எடுபிடி எடப்பாடி கேட்டார்.

இப்போது பார்த்தீர்களா நம்முடைய தமிழ்நாட்டு எம்.பிக்கள் பாஜகாரர்களை பார்லிமென்ட்டில் பந்தாடிவிட்டு வந்திருக்கிறார்கள். இதுவே அதிமுக அடிமைகள் அங்கே சென்றிருந்தால், என்ன செய்திருப்பார்கள் என்று உங்களுக்கே நன்றாகத் தெரியும். கருப்பு சிவப்புப் படை, கடைசிச் சொட்டு ரத்தம் இருக்கும் வரை விடாமுயற்சியாக தமிழ்நாட்டிற்காகப் போராடும்! இப்போது சொல்லுங்கள்?

இந்த மண்ணில் யார் ஆட்சி தொடர வேண்டும்? 200 தொகுதிகளுக்கு மேல் எந்த அணி வெல்ல வேண்டும்? தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? தமிழ்நாட்டை மிரட்டிப் பார்த்தவர்களுக்கு இன்றைக்குத் தக்க பதிலடி நாடாளுமன்றத்திலேயே கிடைத்திருக்கிறது.தொகுதி மறுவரையறை தமிழர்களின் அரசியல் உரிமைப் போர்! தமிழர்கள் சொந்த நாட்டிலேயே அதிகாரமில்லாத அகதிகள் ஆகாமல் தடுக்க நடக்கும் போர்! அதில் இன்றைக்கு நாம் வெற்றி பெற்றிருக்கிறோம்! இவ்வாறு அவர் பேசினார்.

* 2023ம் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற பிரதமர் மோடி தயாரா?
‘‘2023-லேயே மகளிருக்கு இடஒதுக்கீடு தரும் மசோதா நிறைவேறிவிட்டது. நாங்கள் ஆதரித்திருக்கிறோம். பா.ஜ.க. நினைத்தால் 2024 தேர்தலிலேயே மகளிருக்கு இடஒதுக்கீடு கொடுத்திருக்க முடியும். ஆனால், அதை அவர்கள் செய்யவில்லை. இப்போதுகூட ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை. தற்போதுள்ள தொகுதி எண்ணிக்கையிலேயே 33 விழுக்காடு பெண்களுக்குக் கொடுக்கலாம். 2029 தேர்தலிலேயே இதை நடைமுறைப்படுத்தலாம்.

பாஜ இதற்குத் தயாரா? பெண்களுக்கான இடஒதுக்கீடு சட்டம்தான் 2023ம் ஆண்டே நிறைவேறிவிட்டதே… எல்லோருமே ஆதரிக்கிறோமே! பிறகு ஏன் தாமதம்? இதுதான் இந்தியாவின் கேள்வி. இதைக் கேட்டால் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள் என்ன சொல்கிறார் தெரியுமா? “தமிழர்களைப் படிப்பறிவு இல்லாதவர்கள்” என இழிவாகப் பேசுகிறார்.

“நம்முடைய பிரதமர் அவர்கள் எந்தக் காலேஜில், என்ன படித்தார். எங்கு டிகிரி வாங்கினார்?” என்று தமிழ்நாட்டு மக்கள் ஒருவேளை திருப்பித் கேட்டுவிட்டால், பியூஷ் கோயல் நிலைமை என்ன ஆகும்? நினைத்துப் பார்த்தாலே காமெடியாக இருக்கிறது. அதனால் வாயை அடக்குங்கள்’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

* இந்த மண்ணில் சமத்துவம், சமூகநீதி, பொதுவுடைமைக்கான, கருப்பு, சிவப்பு, நீலக் கொடிகள்தான் பறக்கும். இன்னும் சொல்கிறேன் திமுக இருக்கும் வரை உங்களுடைய காவிக் கொடி ஒருபோதும் இங்கே பறக்காது. தன்மானமுள்ள தமிழர்கள் பறக்கவும் விடமாட்டார்கள்.

* எடப்பாடிக்கு முதல்வர் 10 கேள்வி பதில் சொல்லவில்லை என்றால் 23ம் எக்ஸாமில் ‘0’தான்: அரியர்தான் எழுத வேண்டும் என கிண்டல்
தமிழ்நாட்டிற்குத் துரோகம் செய்யும் பாஜவை வளர்ப்பதற்காகவும், தமிழ்நாட்டைப் பாஜவுக்குத் தாரைவார்ப்பதற்காகவும் வெட்கமே இல்லாமல் பழனிசாமி வாக்குக் கேட்கிறார். ஆட்சிக்கு வந்தால் பா.ஜவிடம் கோரிக்கை வைத்துத் திட்டங்களைக் கொண்டு வருவாராம்… கேட்கும்போதே உங்களுக்கெல்லாம் சிரிப்பு வருகிறதல்லவா? ஏற்கனவே முதலமைச்சராக இருந்தபோது, தமிழ்நாட்டின் உரிமைகளை எல்லாம் அடகு வைத்த பழனிசாமி, இப்போது புலிப்பாண்டியாக மாறி அழுத்தம் தருவாராம்…

நம்முடைய ஊரில் சொல்வார்கள் அல்லவா “அறுக்கத் தெரியாதவனுக்கு 52 அருவா”. இது பழனிசாமிக்காக உருவான பழமொழி! ஓ.பி.எஸ்சிடம் கேளுங்கள், இன்னும் நிறையத் துரோகங்களைச் சொல்வார். தொகுதி மறுவரையறை என்ற முக்கியமான ஒரு பிரச்னையில், தமிழ்நாட்டில் ஒரு அடிமை மட்டும் எதுவும் பேசாமல் இருந்தார். யார்? பழனிசாமி. பழனிசாமி இப்போது என்ன ஆனது பார்த்தீர்களா? ன்றிய அரசு சிறப்பாகப் பண்ணுவார்கள், அருமையாக இருக்கும் எனப் பேசினீர்களே.

இதற்குப் பெயர் கருத்தா? இதற்குப் பெயர் நிலைப்பாடா? இது ஒரு கட்சி. இதற்கு ஒரு தலைவர் வேறா? அதனால்தான் சொன்னேன், பழனிசாமி பேசாமல் கட்சியைக் கலைத்துவிட்டு, நீங்கள் பாஜவில் சென்று சேர்ந்துவிடுங்கள்! பத்து தோல்வி பழனிசாமி அவர்களே! உங்களுடைய ஓனரை டெல்லியில் வைத்து வீழ்த்தியிருக்கும் இந்த நேரத்தில், உங்களிடம் மக்கள் கேட்க ஆசைப்படும் பத்து கேள்விகளை இப்போது உங்களிடம் கேட்கப் போகிறேன்.

1. திருவள்ளுவருக்குக் காவியடிப்பது, மும்மொழி கொள்கை, தேசியக் கல்விக் கொள்கையில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?
2. இந்தியை உள்ளே விட்டால்தான் 2 ஆயிரம் கோடி ரூபாய் கல்விநிதி எனும் தர்மேந்திர பிரதான் கருத்தை ஏற்கிறீர்களா? அப்படி இல்லையென்றால், பாஜ தலைவர்களை மேடையில் வைத்துக்கொண்டு அதைச் சொல்ல முடியுமா?
3. நீட் விலக்கு நிபந்தனையோடுதான் திமுக கூட்டணி வைத்திருந்தது. உங்களால் ஏன் தமிழ்நாட்டிற்கு நீட் விலக்கு தந்தால்தான் பாஜவுடன் கூட்டணி என நிபந்தனை விதிக்க முடியவில்லை?
4. கிறிஸ்தவ மக்களுக்கு எதிரான எப்சிஆர்ஏ சட்டத் திருத்தம் பற்றி உங்களுடைய நிலைப்பாடு என்ன? உங்களுக்குத்தான் கூட்டணி வேறு, கொள்கை வேறு எனச் சொல்கிறீர்களே… உங்களால் தைரியமாக இதை எதிர்க்க முடியுமா?
5. ஒரு கற்பனைக்காக சொல்கிறேன்… என்டிஏ கூட்டணி வெற்றி பெறுகிறது என வைத்துக் கொண்டால், தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சிதான் அமையும் என்று பாஜ தலைவர்கள் உறுதி கொடுப்பார்களா?
6. கட்டி முடிக்காத எய்ம்ஸ் தவிர்த்து, உங்களுடைய ஓனர் பாஜ தமிழ்நாட்டிற்காகக் கடந்த 12 ஆண்டுகளில் கொண்டு வந்த சிறப்புத் திட்டம் என்ன?
7. மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள், விபிஎஸ்ஏ எனும் கல்விச் சட்டம், மகளிர் இடஒதுக்கீட்டுச் சட்டம், மகாத்மா காந்தி நூறுநாள் வேலை உறுதிச் சட்டத்தை நீக்கிவிட்டுக் கொண்டு வந்திருக்கும் புதிய நூறுநாள் சட்டம் என பாஜ கொண்டு வந்திருக்கும் ஒரு சட்டத்தின் பெயரையாவது தமிழ்நாட்டில் இருக்கும் மக்களால் வாயால் சொல்ல முடியுமா? எல்லாவற்றிற்கும் சமஸ்கிருதத்தில் பெயர் வைத்துவிட்டு, அதை ஆங்கில வடிவத்தில் எழுதினால் அது ஆங்கிலம் ஆகிவிடுமா? இதை எதிர்த்து உங்களால் பேச முடியுமா? இந்தித் திணிப்பையே எதிர்க்காத உங்களை எதற்குத் தமிழர்கள் நம்ப வேண்டும்?
8. முஸ்லிம் மக்களின் சொத்துகளைப் பறிக்கும் வக்பு சட்டத்தைக் கைவிடச் சொல்லி பா.ஜ.விடம் கேட்டீர்களே? நீங்கள் கேட்டதை அவர்கள் மதித்தார்களா? அப்படிப்பட்ட கூட்டணியில் தொடர்வது சிறுபான்மையின மக்களுக்கு நீங்கள் செய்யும் துரோகம்தானே?
9. தொகுதி மறுவரையறையில் வாஜ்பாய் செய்தது போன்று 25 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க மோடியிடம் நீங்கள் வலியுறுத்துவீர்களா?
10. பேரறிஞர் அண்ணாவும், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும் போற்றிய தந்தை பெரியாரை உங்களுடைய பா.ஜ.க. ஓனர் அவமதிக்கிறார்களே… அதற்கு உங்களுடைய பதில் என்ன? கூட்டத்தின் முகப்பிலிருந்தே பெரியார் படத்தை எடுத்துவிட்டீர்களே! திராவிடம் என்பதே போலிக் கொள்கை என பா.ஜ.க. சொல்கிறார்கள். உங்கள் கட்சிப் பெயரில் திராவிடம் இருக்கிறது. பா.ஜ.காரர்கள் இப்படிப் பேசுவது உங்களுக்கு உறுத்தவில்லையா? உங்களுடைய கட்சியின் அடிப்படையையே மறுக்கும் ஒருவரோடு கூட்டணி வைத்திருக்கும் உங்களை அடிமை எனக் கூப்பிடாமல் வேறு எப்படி கூப்பிடுவது?

இத்தனை கேள்விகளும் மக்கள் மனதில் இருக்கும் கேள்விகள்தான். வழக்கம் போன்று, இப்போதும் நீங்கள் பதில் சொல்லவில்லை என்றால், மக்களே ஏப்ரல் 23 எக்ஸாமில் உங்களுக்குப் பூஜ்ஜியம் என மார்க் போட்டுவிடுவார்கள். திரும்பவும் அரியர்தான்! பெயில்தான்! ஆனால், எங்களுடைய திராவிட மாடல் 5 ஆண்டுகளில் எல்லாப் பாடத்திலும் நூற்றுக்கு நூறு எடுத்திருக்கிறோம். இந்தியாவே திரும்பிப் பார்க்கும், எல்லா மாநிலங்களும் பின்பற்றும் முத்திரைத் திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

* பட்டாசு வெடித்து முதல்வர் மகிழ்ச்சி: வெள்ளைச்சட்டைக்கு மாறினார்
ஒன்றிய அரசின் தொகுதி மறுவரையறை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் வீடுகளில் கருப்புக்கொடியேற்றி எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமென திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். அதனை தொடர்ந்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கருப்புச் சட்டை அணிந்து தொகுதி மறுவரையறை திருத்த மசோதா நகலை எரித்தார்.

மேலும், கருப்புச்சட்டை அணிந்தபடியே நேற்று முன் தினம் நாமக்கல், பெரம்பலூர் பிரசார கூட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். நேற்றைய தினம் தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்திலும் கருப்புச்சட்டை அணிந்தபடியே பிரசாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில் நேற்று மாலை நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை திருத்த மசோதா தோல்வியடைந்தது. இதனையடுத்து இரவு திண்டுக்கல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு போராடி வென்றதை கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக வெள்ளை சட்டை அணிந்து பட்டாசு வெடித்து, அங்கிருந்த மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

Related Stories: