ஸ்டட்கார்ட்: ஸ்டட்கார்ட் ஓபன் மகளிர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் நேற்று, உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா, செக் வீராங்கனை கரோலினா முஸோவா அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினர். ஜெர்மனியின் ஸ்டட்கார்ட் நகரில் ஸ்டட்கார்ட் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த காலிறுதிப் போட்டி ஒன்றில் உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா, செக் வீராங்கனை லிண்டா நோஸ்கோவா மோதினர்.
இப்போட்டியின் முதல் செட்டில் இரு வீராங்கனைகளும் அபாரமாக ஆடி புள்ளிகளை பெற்றதால் டைபிரேக்கர் வரை நீண்டது. கடைசியில் அந்த செட்டை 7-6 (7-2) என்ற புள்ளிக் கணக்கில் எலினா வசப்படுத்தினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டில் சிறப்பாக ஆடிய எலினா, 7-5 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை கைப்பற்றினார். அதனால், 2-0 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடிய அவர் அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதிச் சுற்றுப் போட்டியில் செக் வீராங்கனை கரோலினா முஸோவா, அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப் மோதினர். இப்போட்டியின் முதல் செட்டை முஸோவா, 6-3 என்ற புள்ளிக் கணக்கிலும், 2வது செட்டை, 7-5 என்ற புள்ளிக்கணக்கில் காஃபும் கைப்பற்றினர். அதைத் தொடர்ந்து வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டில் சிறப்பாக ஆடிய முஸோவா, 6-3 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை வசப்படுத்தினார். அதனால், 2-1 என்ற செட் கணக்கில் வென்ற முஸோவா அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
