ஸ்டட்கார்ட்: ஸ்டட்கார்ட் மகளிர் ஒற்றையர் டென்னிஸ் முதல் சுற்றுப் போட்டியில் நேற்று, ரஷ்ய வீராங்கனை டயானா ஸ்னெய்டர் அபார வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். ஜெர்மனியின் ஸ்டட்கார்ட் நகரில், ஸ்டட்கார்ட் மகளிர் டென்னிஸ் தகுதிச் சுற்றுப் போட்டிகள் கடந்த 11ம் தேதி துவங்கி 12ம் தேதி வரை நடந்தன. அதன் பின் தற்போது முதல் சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.
நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டி ஒன்றில் ரஷ்யாவை சேர்ந்த டயானா மேக்சிமோவ்னா ஸ்னெய்டர் (22), ஜெர்மனி வீராங்கனை டமாரா கோர்பாட்ஸ் மோதினர். போட்டியின் துவக்கம் முதல் ஸ்னெய்டர் அபார ஆட்டத்திறனை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்தினார். முதல் செட்டில் சிறப்பாக ஆடிய அவர் 6-3 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை வசப்படுத்தினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டில் சூறாவளியாய் சுழன்றாடிய அவர், ஒரு புள்ளி மட்டுமே விட்டுத் தந்தார்.
அதனால், 6-1 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை அவர் வசப்படுத்தினார். எனவே, 2-0 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடிய டயானா ஸ்னெய்டர் 3வது சுற்றுக்கு எளிதில் முன்னேறினார். மற்றொரு முதல் சுற்றுப் போட்டியில் இத்தாலியை சேர்ந்த உலகின் 8ம் நிலை வீராங்கனை ஜாஸ்மின் பவோலினி (30), துருக்கியை சேர்ந்த 79ம் நிலை வீராங்கனை ஸெய்னெப் ஸோன்மெஸ் (23) மோதினர். இப்போட்டியில் சிறப்பாக ஆடிய ஸெய்னெப், அனுபவ வீராங்கனை பவோலினியை 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வீழ்த்தி 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
