வெறிச்சோடிய குன்னூர் காட்டேரி பூங்கா

குன்னூர், ஏப்.17: தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக குறைந்து காணப்படுகிறது. குறிப்பாக, குன்னூர் அருகே உள்ள காட்டேரி பூங்கா சுற்றுலாப்பயணிகளின்றி முற்றிலும் களை இழந்து காணப்படுகிறது.

வழக்கமாக வார இறுதி நாட்களிலும், சீசன் காலங்களிலும் ஆயிரக்கணக்கான பயணிகள் குவியும் இப்பூங்காவில், தற்போது ஒரு சில உள்ளூர் மக்கள் மட்டுமே காணப்படுகின்றனர். மாநில எல்லைகள் மற்றும் மாவட்ட எல்லைகளில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருவதால், வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்துள்ளது.

இதேபோல் உரிய ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரொக்கமாக எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் தங்கள் பயணங்களைத் தள்ளி வைத்துள்ளனர். குறிப்பாக தேர்தல் பிரசாரங்கள் மற்றும் தேர்தல் தொடர்பான பணிகளில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளதும் ஒரு காரணமாகப் பார்க்கப்படுகிறது.

தேர்தல் முடிவடையும் வரை இதே நிலை நீடிக்க வாய்ப்புள்ளதால், சுற்றுலா தொழிலை நம்பியுள்ள வியாபாரிகள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் வருவாய் இன்றி தவித்து வருகின்றனர். தேர்தல் முடிந்து கோடை சீசன் முழுமையாகத் தொடங்கும் போது மீண்டும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related Stories: