சென்னை: தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் (முதற்கட்டம்) ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் வருகிற 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் தகவல் சீட்டுகளை (பூத் சிலிப்) விநியோகிக்கும் பணியை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இந்த தகவல் சீட்டில் வாக்காளரின் விவரங்கள், வாக்குச்சாவடி அமைவிடம், வாக்குப்பதிவு நாள் மற்றும் நேரம், வாக்குச்சாவடி வரைபடத்தின் நகல் ஆகியவற்றுடன் வாக்காளர்களுக்கு வழிகாட்டும் ‘செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை’ பட்டியலும் இடம்பெற்றுள்ளது. ஒரு கியூஆர் குறியீடு வாக்காளர் விவரங்களை விரைவாக கண்டுபிடிக்க இது உதவுகிறது.
சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நேரடியாக வீடு வீடாக சென்று இந்த சீட்டுகளை விநியோகிப்பார்கள். இந்த செயல்முறை வாக்குப்பதிவு நாளுக்கு குறைந்தது 5 நாட்களுக்கு முன்னதாகவே அனைத்து வாக்காளர்களுக்கும் கொடுக்கப்பட்டு விடும். தேர்தல் செயல்பாட்டில் மாற்றுத்திறனாளிகளின் முழுமையான மற்றும் ஆக்கப்பூர்வமான பங்கேற்பை உறுதி செய்வதற்காக, பார்வை குறைபாடுள்ள அல்லது பார்வையற்றவர்களுக்கு, வழக்கமான தகவல் சீட்டுடன் கூடுதலாக பிரெய்லி வசதியுடன் கூடிய அணுகக்கூடிய வாக்காளர் தகவல் சீட்டுகளை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தகவல் சீட்டுகள் விநியோகத்தின்போது வாக்குச்சாவடி முகவர்கள், வேட்பாளர்கள் அல்லது அவர்களின் முகவர்கள் உடன் செல்லலாம். வாக்குப்பதிவின்போது ஒரு வாக்காளர் தனது வாக்கை செலுத்துவதற்கு, வாக்காளர் தகவல் சீட்டை தனித்த அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ள முடியாது. வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்த வாக்காளர் அடையாள அட்டை தவிர, இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 12 அடையாள சான்றுகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம் என தேர்தல் ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
