ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வரும் அரசியல் சாசன வரைவு திருத்த சட்டம் பற்றி நான் கடந்த ஒரு வாரமாகச் சொல்லி வரும் அச்சம் தற்போது நிரூபணமாகியிருக்கிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறி இருக்கிறார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், மக்களவையில் தமிழக எம்.பி-க்கள் எண்ணிக்கை தற்போது 39-ஆக உள்ளது. மக்களவையின் உறுப்பினர் எண்ணிக்கை 543-லிருந்து 815-ஆக, அதாவது 50% அதிகரிக்கப்படும் போது, தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவமும் 39-லிருந்து 58-ஆக உயரும் என்று மேலோட்டமாகத் தோன்றும். ஆனால் இது வெறும் மாயை என்று நான் சொன்னேன். ஏனென்றால் தொகுதி மறுவரையறை செய்யும் போது 58 என்பது இறுதியில் 46-ஆக குறையும். அதே நேரத்தில், உத்தர பிரதேச மாநிலத்தின் தற்போதைய எண்ணிக்கை எம்.பி-க்களின் எண்ணிக்கை 80. இது முதலில் 120-ஆக உயரும், தொகுதி மறுவரையறைக்குப் பின் சுமார் 140-ஆக மேலும் உயரும்
மக்கள் தொகையை நிலைப்படுத்திய 5 தென் மாநிலங்களின் தற்போதைய நாடாளுமன்ற பிரதிநித்துவம் 24.3% ஆக உள்ளது. ஆனால் தொகுதி மறுவரையறைக்கு பின் இது குறைந்து 20.7% என்ற நிலைக்கு வந்து விடும். இதன் மூலம் மக்களவையில் தென் மாநிலங்களின் குரல் அழுத்தப்படும், ஒடுக்கப்படும். மொத்தத்தில் தொகுதி மறு வரையறை என்பது நாட்டில் நிலவும் கூட்டாட்சி சமநிலையை அடியோடு தகர்ப்பதற்கான, விஷமத்தனமான மற்றும் கொடூரமான நடவடிக்கை.
எனவே அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை ஒற்றுமையாக எதிர்த்து தோற்கடிக்க வேண்டும். கூட்டாட்சி சமநிலையை மொத்தமாக மாற்றியமைக்க வேண்டு என்ற நோக்கம் கொண்ட, இது ஒரு வஞ்சகமான, தீய நடவடிக்கையாகும். இம்முயற்சி கண்டிப்பாக எதிர்க்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார். முன்னதாக தனது மற்றொரு அறிக்கையில் ப.சிதம்பரம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை உயர்த்துவது என்ற முடிவு விரிவாக விவாதிக்கப்பட வேண்டியது, ஆனால் அதற்கு அரசு தேர்ந்தெடுத்திருக்கும் நேரம் மிகவும் கண்டனத்துக்கு உரியது என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
