சென்னை: தமிழக போலீஸ் டிஜிபி நியமன விவகாரம் தொடர்பாக தலைமை தேர்தல் கமிஷனுக்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு அனுப்பிய மனுவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திமுக பொருளாளரும், எம்பியுமான டி.ஆர்.பாலு, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு இன்று மனுவை அனுப்பியுள்ளார். அந்த மனுவில், ‘தமிழக சட்டசபை பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முன்னதாக, தமிழக போலீஸ் டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ம் தேதியுடன் ஓய்வு பெற்றார். அதன் பின்னர், புதிய டிஜிபியை தேர்வு செய்வதில் தமிழக அரசுக்கும், யூபிஎஸ்சி எனப்படும் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி நீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. அதன்படி, தற்காலிக டிஜிபிக்கு பதிலாக வேறொரு அதிகாரியை நியமிக்க மாநில அரசுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து, மார்ச் மாதம் 12ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், புதிய டிஜிபி தேர்வுக்கான கூட்டத்தை மார்ச் மாதம் 20ம் தேதி நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் நடத்தை விதிகள் கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி முதல் அமலுக்கு வந்தன. தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 2ம் தேதி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில், 1992ம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவைச் சேர்ந்த சந்தீப் ராய் ரத்தோர் என்பவரை தமிழகத்தின் புதிய டிஜிபியாக நியமிப்பதாக அறிவித்தது.
இந்த நியமனம் தற்போது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களுக்கு எதிரானது என்றும் திமுக சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில், தேர்தல் ஆணையம் ஒரு அதிகாரியை டிஜிபியாக நியமிப்பதாக இருந்தால், தேர்தல் முடியும் வரை அவரை ‘பொறுப்பு’ டிஜிபியாக மட்டுமே நியமிக்க முடியும். மேற்கு வங்கம் போன்ற பிற மாநிலங்களில் தேர்தல் ஆணையம் அவ்வாறுதான் பொறுப்பு அதிகாரிகளை நியமித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் மட்டும் சந்தீப் ராய் ரத்தோரை நிரந்தர டிஜிபியாக நியமித்திருப்பது சட்டப்படி செல்லாது. இது தமிழகத்தை மற்ற மாநிலங்களில் இருந்து வேறுபடுத்திப் பார்க்கும் பாரபட்சமான நடவடிக்கையாகும்.
உச்ச நீதிமன்றத்தின் பிரகாஷ் சிங் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின்படி, மாநில அரசு அனுப்பும் மூன்று அதிகாரிகள் பட்டியலில் இருந்துதான் டிஜிபி தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால், தேர்தல் ஆணையம் அந்த விதிகளை மீறி நேரடியாக நியமனம் செய்துள்ளது. எனவே, 2ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் திருத்தம் செய்ய வேண்டும். சந்தீப் ராய் ரத்தோர் தேர்தல் முடியும் வரை மட்டுமே பொறுப்பு டிஜிபியாக இருப்பார் என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும். தேர்தல் முடிந்த பிறகு மாநில அரசே நிரந்தர டிஜிபியை முறைப்படி நியமிக்கும். எனவே, சட்டச் சிக்கல்களைத் தவிர்க்கும் வகையில் தேர்தல் ஆணையம் உடனடியாக விளக்கத்தை வெளியிட வேண்டும்’ என்று மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
