நாகர்கோவில்: நாகர்கோவில் தே.ஜ.கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி சாலை வலம் மேற்கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் வருகிற 23ம்தேதி சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் தேசிய, மாநில கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க பிரதமர் நரேந்திர மோடி நாகர்கோவில் வந்தார்.
டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வரும் பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் மறவன்குடியிருப்பு ஆயுதப்படை மைதானத்தில் உள்ள ஹெலிபேடு தளத்தில் வந்து இறங்கினார். பின்னர் கார் மூலம் நாகர்கோவில் பீச் ரோடு சந்திப்பு, செட்டிக்குளம் சந்திப்பு வழியாக வேப்பமூடு காமராஜர் சிலை சந்திப்பு வந்தடைந்தார்பிரதமர் மோடி. அதைத்தொடர்ந்து நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் காமராஜர் சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செய்தார். பின்னர் நாகர்கோவிலில் மோடியின் சாலைவலத்தை தொடங்கினார்.
நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் இருந்து வடசேரி எம்ஜிஆர் சிலை வரை பிரதமர் மோடி சாலைவலம் செல்கிறார். சாலை வலம் செல்லும் மோடியின் வாகனத்தில் எடப்பாடி கே.பழனிசாமி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். பொன் ராதாகிருஷ்ணன், அண்ணாமலை ஆகியோரும் மோடியுடன் பரப்புரை வாகனத்தில் உள்ளனர். சாலையின் இருபுறமும் தே.ஜ.கூ. தொண்டர்கள், பொதுமக்கள் கைகளை அசைத்து பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பூக்களை தூவி வரவேற்பு அளிக்கும் பொதுமக்களை பார்த்து பிரதமர் மோடி கையசைத்து உற்சாகம்.
மீண்டும் வருகிற 18ம்தேதி கோவையில் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். பிரதமர் வருகையையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் நகரில் இன்று காலை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. சாலைகள் அடைக்கப்பட்டு, வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. மதியம் 12 மணி முதல் இரவு 7 மணி வரை போக்குவரத்து மாற்றம் அமுலில் இருக்கும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர். எனவே வெளியூர் செல்பவர்கள், ரயில் நிலையம், விமான நிலையம் செல்பவர்கள் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்கள் தங்களது பயண நேரத்தை முன்கூட்டியே மாற்றம் செய்து திட்டமிட்டுக் கொள்ளுமாறு காவல்துறை கேட்டுக் கொண்டு உள்ளது.
இன்று மாலை 4 மணிக்கு துவங்கவுள்ள இந்த ரோடு ஷோ, சரியாக ஒரு கிலோமீட்டர் தூரம் நடைபெறுகிறது. கன்னியாகுமரி, நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி மக்கள் வேப்பமூடு மற்றும் மணிக்கூண்டு சந்திப்பிலும், குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி மக்கள் அண்ணா விளையாட்டு மைதானம் அருகிலும், கிள்ளியூர், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி மக்கள் வடசேரி அண்ணா சிலை அருகிலும் நிற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல நெல்லை, தூத்துக்குடி, தென்காசி போன்ற பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கும் தனித்தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
எடப்பாடி பழனிசாமி குமரி வருகை
பிரதமர் மோடி ரோடு ேஷாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்கிறார். இதற்காக இன்று காலை அவர் ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தடைந்தார். மாலையில் நாகர்கோவில் வந்து, ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்பதுடன், பிரதமர் மோடி வரவேற்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார். பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பா.ஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேசிய ெசயற்குழு உறுப்பினர் பொன். ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி உள்ளிட்டோரும் பிரதமரை வரவேற்கிறார்கள்.
3500 போலீஸ் குவிப்பு
நாகர்கோவிலில் பிரதமரின் ரோடு ஷோ நடக்கும் சாலை மற்றும் பிரதமரின் கார் வரும் சாலையில் நேற்று இரவு முதல் போலீசார் குவிக்கப்பட்டனர். ரோடு ஷோ நடக்கும் வேப்பமூடு காமராஜர் சிலை சந்திப்பு முதல் வடசேரி எம்.ஜி.ஆர். சிலை சந்திப்பு வரை சாலையின் இருபுறத்திலும் தொண்டர்கள் நிற்க வசதியாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள் இன்று மூடப்பட்டன. இந்த பகுதிகளில் இன்று காலை முதல் போலீசார் மோப்ப நாய் சோதனையிலும் ஈடுபட்டனர். வெடிகுண்டு நிபுணர்களும் சோதனை செய்தனர். பிரதமர் பாதுகாப்பு பணியில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். சுமார் 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
