அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலப்பால் பரபரப்பு

 

வேடசந்தூர்: அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மர்ம நபர் மனிதக்கழிவை கலந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் அருகே தங்கம்மாபட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். மாணவர்கள் பயன்பாட்டிற்காக மாடியில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

அந்த குடிநீர் தொட்டிக்குள் நேற்று பிளாஸ்டிக் கவரில் மனிதக்கழிவு கிடந்துள்ளது. மேலும் தண்ணீர் தொட்டியில் எச்சரிக்கை துண்டு சீட்டு ஒன்றும் எழுதி ஒட்டப்பட்டிருந்தது. அதில், ‘என் ஒரு குடியை கெடுத்தால் பள்ளிக்கூடத்தில் அத்தனை பிள்ளைகள் குடியை எல்லாம் கெடுத்து விடுவேன். சும்மா விடமாட்டேன். பள்ளி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை’ என கூறப்பட்டிருந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள், இதுகுறித்து பள்ளி ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். இதுபற்றி வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களிடம் தனித்தனியே விசாரணை நடத்தினர். தொடர்ந்து மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், வேடசந்தூர் தாசில்தார் ராஜேந்திரன் உள்ளிட்டோர் வந்து குடிநீர் தொட்டியை ஆய்வு செய்தனர். பின்னர் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மருத்துவக்குழுவினர் தொட்டியில் இருந்து தண்ணீரை ஆய்வுக்காக எடுத்து சென்றனர்.

பள்ளி தலைமையாசிரியை சந்திரபிரபா புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து பள்ளியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: