சென்னை: சம்பா சாகுபடி தொடங்க வேண்டிய நேரத்தில், தமிழகத்திற்கு தேவையான காவிரி நீரை உரிய காலத்தில் பெற்றுத் தருவது அரசின் முக்கிய பொறுப்பாகும் என பி.ஆர். பாண்டியன் கூறினார்.சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் சந்தித்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தற்போது வைகை மற்றும் முல்லைப் பெரியாறு நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் கவலைக்கிடமாக குறைந்துள்ளது. எல் நினோ தாக்கம் காரணமாக இந்த ஆண்டு விவசாயம் நடைபெறுமா என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் உருவாகியுள்ளது. குறிப்பாக சம்பா சாகுபடி தொடங்க வேண்டிய இந்த நேரத்தில், தமிழகத்திற்கு தேவையான காவிரி நீரை உரிய காலத்தில் பெற்றுத்தருவது அரசின் முக்கிய பொறுப்பாகும்.
காவிரி மேலாண்மை ஆணையம் சட்டப்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை திறக்க உத்தரவிட்டபோதும், கர்நாடக அரசு அதனை எதிர்த்தது. தற்போது கர்நாடக மாநிலத்தின் அணைகள் அனைத்தும் நிரம்பியுள்ளதால் மட்டுமே தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இது சட்டப்பூர்வ கடமையை நிறைவேற்றுவதாக இல்லாமல், சூழ்நிலையின் கட்டாயத்தால் நடைபெறும் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.தமிழக அரசு சம்பா சாகுபடிக்கு தேவையான நீரை காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலம் வலியுறுத்தி பெற்றாக வேண்டும்.
விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் உணவு உற்பத்தி பாதிக்கப்படாத வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மேகதாது அணை கட்டுமானத்திற்காக கர்நாடக அரசு பூமி பூஜை நடத்தியது. இதற்கு எதிராக பசுமை தீர்ப்பாயம் தடை விதித்தது. தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணை திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையையே தயாரிக்க முடியாது என்பது சட்ட ரீதியான நிலைப்பாடாகும். எனவே, மேகதாது அணை கட்டுவது மட்டுமே தீர்வு என்று கர்நாடக அரசியல் கட்சிகள் கூறுவது உண்மைக்கு புறம்பானது. காவிரி நீர் பகிர்வு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் சட்டப்படியும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதலின்படியும் மட்டுமே நடைபெற வேண்டும். அதுவே தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநில விவசாயிகளின் நலனுக்கும் உகந்ததாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
