கணவர் தமிழ்நாட்டில் இருக்கும் நிலையில் பீகாரில் பலாத்காரத்துக்கு ஆளான பெண்ணை தரையில் துப்பிய ‘எச்சிலை’ நக்க வைத்த கொடூரம்

பெகுசராய்: பீகாரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணை பஞ்சாயத்து கூட்டி எச்சிலை நக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டம் பாலியா கிராமத்தைச் சேர்ந்த 2 குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவரின் கணவர் தமிழ்நாட்டில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த சூழலில், கடந்த ஜூன் 2ம் மற்றும் ஜூன் 4ம் தேதி இரவில், அந்தப் பெண்ணின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த நிதீஷ் என்பவர், வீட்டிற்குள் புகுந்து அவரை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அப்போது குற்றவாளி தப்பி ஓடியதை பார்த்த சில கிராம மக்கள், பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளியாக கருதி கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக பழி சுமத்தினர். தொடர்ந்து, கடந்த ஜூன் 5ம் தேதி உள்ளாட்சி வார்டு கவுன்சிலரின் மகன் சஞ்சய் யாதவ் மற்றும் நிதீஷின் தாய் ஆகியோர் முன்னிலையில் கிராம பஞ்சாயத்து கூட்டப்பட்டது. அதில், பாதிக்கப்பட்ட பெண்ணை திறந்தவெளியில் மண்டியிட வைத்து, காதுகளை பிடித்துக்கொண்டு தரையில் துப்பிய எச்சிலை (யாருடைய எச்சில் என்று குறிப்பிடவில்லை) நக்க வைத்து கொடூர தண்டனை விதித்தனர்.

இச்சம்பவம் குறித்து ஆரம்பத்தில் அமைதி காத்து வந்த அப்பெண், செல்போன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த கணவருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, தம்பதியினர் உள்ளூர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தும் போலீசார் வழக்கை பதிவு செய்ய மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, பெண் எச்சிலை நக்கும் வீடியோ காட்சிகள் கடந்த சனிக்கிழமை சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதன் பின்னரே, போலீசார் இதுகுறித்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர்.

Related Stories: