திருப்பூர்: நூல் விலை கிலோவுக்கு மேலும் ரூ.10 உயர்த்தி நூற்பாலைகள் அறிவித்துள்ளன. இதனால், தொழில் துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜவுளி, ஆயத்த ஆடை உற்பத்தி செய்யப்பட்டு உள்நாட்டு வர்த்தகம் நடந்து வருகிறது. இதுபோல், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆடை தயாரிப்புக்கு முக்கிய பங்காற்றுவது பருத்தி நூல் ஆகும்.
பருத்தி விலையை பொறுத்து நூல் நிலையில் அவ்வப்போது மாற்றங்கள் இருக்கும். கடந்த டிசம்பர் மாதத்துடன் பருத்தி இறக்குமதி வரி விலக்கு நிறைவடைந்ததால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு வரி விதிக்கப்பட்டது. இதன் காரணமாக, உள்நாட்டு பருத்தியும் கேண்டி ரூ.4000-ரூ.5,500 வரை விலை உயர்ந்தது. இதனால், கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து மே மாதம் வரை மாதந்தோறும் சிறுக சிறுக சுமார் 61 ரூபாய் வரை நூல் விலை உயர்த்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஒன்றிய அரசு பருத்தி இறக்குமதிக்கான 11 சதவீத வரி விதிப்பை ரத்து செய்து உத்தரவிட்டது.
இதன் காரணமாக, நூல் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த மாதத்திற்கான (ஆகஸ்ட்) நூல் விலையை நூற்பாலைகள் நேற்று அறிவித்தன. அதில் கிலோவுக்கு ரூ.10 அதிகரித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தொழில்துறையினர் கூறுகையில்,“நூல் விலை உயர்வு அதிர்ச்சி அளிக்கிறது. நூல் விலை அடிக்கடி உயர்ந்து வருவதால் ஆர்டர்கள் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, நூல் விலையை குறைக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
