நாமக்கல்: காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து, 13ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநிலத் தலைவர் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கர்நாடக அரசு, இந்த ஆண்டுக்கான காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை தமிழகத்திற்கு தர மறுக்கிறது. காவிரியின் குறுக்கே மேகதாட்டில் அணை கட்டவும் முயற்சி செய்து வருகிறது. இதனால், தமிழகத்தில் கடும் வறட்சி ஏற்பட்டு தொழில் வளம் முடங்கும் வாய்ப்பு உள்ளது.
டெல்டா விவசாயிகளுக்கு இந்த ஆண்டு பல லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 22 மாவட்டங்களில், இனிவரும் காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகும். கர்நாடகாவின் தொழில் வளம் வளர, தமிழகத்தில் உற்பத்தி செய்து தான் மின்சாரம் செல்கிறது. அதேபோல், தமிழகத்தின் வழியாகத்தான் கேரள மாநிலத்தில் இருந்து எரிவாயு செல்கிறது. இதை கன்னட அரசியல் கட்சி தலைவர்கள் உணரவில்லை. கர்நாடக அணைகளில் போதிய தண்ணீர் வைத்துக்கொண்டு, வறட்சி என தவறான தகவல் கூறி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மறுக்கிறார்கள். கர்நாடகாவில் உள்ள அரசியல் கட்சிகள், தமிழகத்திற்கு எதிராக வரும் 13ம் தேதி கர்நாடகாவில் பந்த் அறிவித்துள்ளனர்.
எனவே, அதே நாளில் வரும் 13ம் தேதி முதல், கர்நாடகாவில் இருந்து சரக்கு ரயில் மூலம் தமிழகம் வழியாக துறைமுகப் பகுதிக்கு ஏற்றுமதி செய்ய செல்லும் சரக்குகள், வெளிநாட்டில் இருந்து துறைமுகம் வழியாக கர்நாடகாவிற்கு செல்லும் சரக்குகள், ரயில்கள், தமிழகத்தில் உற்பத்தி செய்து கர்நாடகா செல்லும் மின்சாரம், கேரளாவில் இருந்து தமிழகம் வழியாக கர்நாடகா செல்லும் எரிவாயு ஆகியவற்றை, கர்நாடகாவிற்கு செல்ல விடாமல், அனைத்து விவசாய சங்க அமைப்புகள் மற்றும் விவசாயிகளை ஒன்று திரட்டி, கர்நாடகாவிற்கு எதிராக தமிழகம் தழுவிய தொடர் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
