மதுரையில் ஆவின் பாலில் குளோரின் நெடி: பாலித்தீன் பிலிம் நிறுவனத்துக்கு நோட்டீஸ்

 

மதுரை: மதுரை ஆவினில் இருந்து புறநகர் பகுதிகளான திருமங்கலம், உசிலம்பட்டி, கள்ளிக்குடி, வாடிப்பட்டி, கொட்டாம்பட்டி, சிலைமான், வலையங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும், நகர் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆவின் பால் பூத்களுக்கும் பால் பாக்கெட் விநியோகம் செய்யப்படுகிறது. மதுரை மாவட்டம் முழுவதும் ஆவின் டெப்போக்களில் விற்பனை செய்யப்படும் டிலைட் பால் பாக்கெட்களில் பிளாஸ்டிக் மற்றும் குளோரின் போன்ற நெடி வீசுவதாகவும், இதனால் உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும் கூறி மாட்டுத்தாவணி, மாடக்குளம், கூடல் நகர், சிக்கந்தர் சாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் உணவு பாதுகாப்பு துறையினருக்கு புகார் அளித்தனர்.

இதையடுத்து உணவு பாதுகாப்பு துறையினர் மாவட்டத்தின் பல்வேறு ஆவின் டெப்போக்களில் இருந்தும், ஆவின் பால் பண்ணையில் இருந்தும் நீலநிற பால் பாக்கெட்டுகளில் உள்ள பால் மாதிரிகளை சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். ஆய்வில் பால் பாக்கெட்டில் பயன்படுத்தப்படும் பாலி பிலிமில் இருந்தே அந்த நெடி ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மதுரை ஆவினிற்கு வாங்கப்பட்ட 160க்கும் மேற்பட்ட பாலி பிலிம் ரோல்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஆவின் பொதுமேலாளர் முத்து மாதவன் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘துர்நாற்றம் பாலில் இல்லை என்பதும், அது பாலி பிலிமுடன் தொடர்புடையது என்பதும் கண்டறியப்பட்டது. முறையற்ற கியூரிங் செயல்முறை காரணமாக பால் பாக்கெட்டுகளை அடைக்க பயன்படுத்தப்பட்ட பாலி பிலிமிலிருந்தே அந்த நாற்றம் உருவானது என்பது விரிவான ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. பாலித்தீன் பிலிம் விநியோகித்த நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விதிமுறைகளின்படி அந்நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று கூறியிருந்தார்.

Related Stories: