தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்து தனிமைப்பட்டு நிற்கிறார்; கர்நாடகம் சென்று காவிரியை கையோடு எடுத்து வந்து விடலாம் என நினைத்தாரோ? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

 

சென்னை: முதல்வர் கர்நாடகம் சென்றால் காவிரியை கையோடு எடுத்து வந்து விடலாம் என்று நினைத்தாரோ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர், தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்து தனிமைப்பட்டு நிற்கிறார் முதல்வர். தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், விவசாயிகள் சங்கத்தினர் எல்லோரும் மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனளிக்காது என்று எச்சரித்தோம். கர்நாடகம் செல்ல வேண்டாம் என்று முதல்வருக்கு கோரிக்கை வைத்தோம்.

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தரமுடியாது என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்ட மாநிலத்துடன் சட்டரீதியாகத்தான் போராட வேண்டும் என்பதே கடந்த காலத்தில் நாம் பெற்ற படிப்பினை. உபரிநீரை வெளியேற்றும் வடிகால் பகுதியாகத்தான் அவர்கள் தமிழ்நாட்டை பார்க்கிறார்கள். ஆனால், தான் கர்நாடகம் சென்றால் காவிரியை கையோடு எடுத்துவந்து விடலாம் என்று தமிழ்நாட்டின் புதிய முதல்வர் நினைத்தாரோ என்னவோ. நமது எச்சரிக்கைகளை மீறி கர்நாடகம் செல்வதற்கு தூது அனுப்பினார்.

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட சொல்லி காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டதும், ‘‘நீங்கள் இப்போதைக்கு வரவேண்டாம்” என்று கேட்டை சாத்திவிட்டார்கள். இதுபோன்ற சூழ்நிலைகளை முன்பே கணித்துதான், தமிழ்நாட்டிலுள்ள அனைவரும் எச்சரித்தோம். இனியேனும் தமிழ்நாட்டின் உயிர் பிரச்னையான காவிரி விவகாரத்தை முதல்வர் ஆலோசனைகளோடு அணுக வேண்டும். முதல்வரை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு, கர்நாடகத்தில் ஆகஸ்ட் 2 அன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு அம்மாநில முதல்வர் அழைப்பு விடுத்து அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதை தனது செயலால் உணர்த்திவிட்டார்.முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவது எப்போது? முடியுமா முடியாதா? இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Related Stories: