பெரம்பூர்: கத்தியை வைத்து ரீல்ஸ் வெளியிட்ட சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இளைஞர்கள் சிலர் கத்தியை வைத்து ரீல்ஸ் போட்டு அலப்பறையில் ஈடுபடுவதாக கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தனிப்படை எஸ்ஐ முரளி சங்கர் மற்றும் போலீசார், இளைஞர்களின் சமூக வலைதள பக்கங்களை கண்காணித்தனர்.
அதை வைத்து, கொடுங்கையூர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த சூர்யா (எ) வெள்ளை சூர்யா (19), ஜோயல் (19), ராஜேஷ் (18) மற்றும் 17 வயது சிறுவர்கள் 3 பேர் என மொத்தம் 6 பேரை நேற்று காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில், சூர்யா (எ) வெள்ளை சூர்யா மீது ஏற்கனவே கொலை வழக்கு உள்ளிட்ட சில குற்ற வழக்குகள் இருப்பதும், இவர் தன்னுடைய நண்பர்களை தவறான வழியில் ரிலீஸ் போட்டு வழி நடத்தியதும் தெரியவந்தது.
இதையடுத்து, வெள்ளை சூர்யா, ஜோயல் மீது வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் பிடிப்பட்ட 3 சிறுவர்கள் உட்பட 4 பேரிடமும் இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது, என்று போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
