சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலைய சுரங்கப்பாதையில் பயங்கர மோதல்; பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 2 பேருக்கு ஓடஓட அரிவாள் வெட்டு

 

* அச்சத்தில் பொதுமக்கள் சிதறி ஓடியதால் பலர் கீழே விழுந்து படுகாயம்
* மீண்டும் தலைதூக்கும் ‘ரூட் தல’ பிரச்னை
* 20 மாணவர்களுக்கு வலை

சென்னை: சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலைய சுரங்கப்பாதையில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட குழு மோதலில், ஒரு தரப்பு மாணவர்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 2 பேரை ஓட ஓட விரட்டி அரிவாள் வெட்டினர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஓடிய போது சுரங்கப்பாதை படிக்கட்டில் பலர் கீழே விழுந்து காயமடைந்தனர். வெட்டு காயமடைந்த இருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலைமறைவான கும்பலை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து விரைவு ரயில்கள் வந்து செல்கின்றன. இதனால் வெளி மாநிலம் செல்வோர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோர் என சென்ட்ரல் ரயில் நிலையம் 24 மணி நேரமும் லட்சக்கணக்கான மக்களால் வந்து செல்கின்றனர். மேலும், சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் புறநகர் ரயில் நிலையமும் அமைந்துள்ளதால் எப்போது பரபரப்பாக காணப்படும்.

நேற்று திங்கட்கிழமை என்பதால் வழக்கத்தை விட சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் புறநகர் ரயில் நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்திற்கு திருவள்ளூர் பகுதியில் இருந்து நேற்று காலை 8.30 மணி அளவில் மின்சார ரயில் வந்தது. அதில் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டார் வந்தனர். சிலர் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சுங்கப்பாதை வழியாக மெட்ேராவுக்கு சென்றனர்.

அப்போது கல்லூரி மாணவர்கள் சிலர் கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள பச்சையப்பன் கல்லூரிக்கு செல்ல சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையதிற்கு புத்தக பையுடன் சென்றனர். அந்த நேரத்தில் 30க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் முன்பு குவிந்தனர். புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து வந்த மாணவர்களை ஏற்கனவே காத்திருந்த ஒரு தரப்பு மாணவர்கள் திடீரென சுற்றி வளைத்து கத்தி மற்றும் அரிவாளுடன் தாக்க முயன்றனர்.

இதில் அச்சமடைந்த மாணவர்கள் சிலர், உயிருக்கு பயந்து அலறியபடி சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் தப்பி ஓடும் வகையில் சுரங்கப்பாதைக்குள் ஓடினர். ஆனால் எதிர்தரப்பு மாணவர்கள் மற்றொரு தரப்பு மாணவர்களை விடாமல், பின்தொடர்ந்து பேன்ட்டில் மறைத்து வைத்திருந்த அரிவாள் மற்றும் கத்திகளை எடுத்துக்கொண்டு ‘சினிமா காட்சிகள்’ போல் மெட்ரோ சுரங்கப்பாதையில் இரு குழுக்களாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். அதில் 2 கல்லூரி மாணவர்களை ஒரு தரப்பு மாணவர்கள் அரிவாளால் சரமாரியாக தலையில் வெட்டினர். சிலர் சுரங்கப்பாதையில் இருந்த ஒரு சிசிடிவி கண்காணிப்பு கேமராவையும் அடித்து உடைத்தனர். இதை பார்த்த சுரங்கப்பாதையில் நடந்து வந்த பயணிகள் அலறியடித்து ஓடினர்.

இதை பார்த்து தாக்குதல் நடத்திய மாணவர்கள் குழுவினர் அங்கிருந்து கையில் ரத்தம் சொட்ட சொட்ட அரிவாள் மற்றும் கத்திகளுடன் மெட்ரோ சுரங்கப்பாதையில் இருந்து வெளியே தப்பி ஓடினர். அப்போது மெட்ரோ சுரங்கப்பாதையில் பாதுகாப்பு பணியில் இருந்த மெட்ரோ பணியாளர்கள் 5 பேர் தாங்கள் உயிர் பிழைத்தால் போதும் என்று தப்பி ஓடிவிட்டனர். சில வயதான மற்றும் மாற்றுத்திறனாளிகள் பீதியில் ஓடியபோது சுரங்கப்பாதையில் கீழே விழுந்து காயமடைந்தனர்.

பின்னர் சம்பவம் குறித்து பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனர். அதன்படி பெரியமேடு காவல் நிலையத்தில் இருந்து 10க்கும் மேற்பட்ட போலீசார் ரோந்து வாகனங்களில் விரைந்து வந்தபோது, ஒரு மாணவன் தலையில் பலத்த காயங்களுடனும், மற்றொரு மாணவன் தலை மற்றும் உடல் முழுவதும் வெட்டு காயங்களுடனும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். தலையில் பலத்த வெட்டு காயம் இருப்பதால் மாணவர்கள் பேச முடியாத நிலையில் அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மோதல் குறித்து பெரியமேடு போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து காயம் அடைந்த 2 மாணவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

அதில், சென்னை திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த நிதிஷ்குமார் (18), சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.எஸ்சி முதலாமாண்டு படித்து வந்தது தெரியவந்தது. மற்றொரு மாணவன் நிதிஷ்குமார் வசிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஏம்ராஜ் எனவும், இவரும் பச்சையப்பன் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வருவதும் தெரியவந்தது. இவர்களுக்கும் புறநகர் ரயிலில் வரும் மற்றொரு கல்லூரி மாணவர்களுக்கும் ரூட் பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அடிக்கடி ரயில் நிலையங்களில் இரு தறப்பு கல்லூரி மாணவர்களும் மோதலில் ஈடுபட்டு வந்ததும், அதற்கு பழிவாங்கும் நோக்கில் நேற்று பச்சையப்பன் கல்லூரியில் படித்து வரும் நிதிஷ்குமார் மற்றும் ஏம்ராஜ் ஆகியோர் புறநகர் ரயிலில் வந்து, கல்லூரிக்கு செல்ல மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் செல்ல முயன்ற போது, எதிர் தரப்பு மாணவர்கள் தாக்குதல் நடத்தியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

வெட்டி காயங்களுடன் மருத்துவமனையில் உள்ள 2 மாணவர்கள் பேச முடியாத நிலையில் சிகிச்சை பெற்று வருவதால், அவர்களிடம் போலீசார் மோதலில் வெட்டி மாணவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்த முடியாத நிலை உள்ளது. இருந்தாலும், 2 மாணவர்களை பொது இடத்தில் வெட்டிய சக மாணவர்களை கைது செய்ய கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தனிப்படையினர் சம்பவம் நடந்த சென்ட்ரல் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் புறநகர் ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தலைமறைவான சக மாணவர்களை தேடி வருகின்றனர். இதுதவிர மாணவர்கள் மோதல் சம்பவத்தை பார்த்த பயணிகள் மற்றும் ரயில் நிலையத்தில் அமைந்துள்ள கடை ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்ட்ரல் மெட்ரோ சுரங்கப்பாதையில் 20 பேர் கொண்ட கும்பல் 2 மாணவர்களை ஓட ஓட வெட்டிய சம்பவம் பொதுமக்கள் மற்றும் பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* 7 மாணவர்கள் கைது

சென்ட்ரல் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில் 2 மாணவர்களை அரிவாளால் வெட்டிய வழக்கில், 7 மாணவர்களை திருமங்கலம் போலீசார் உதவியுடன் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் மாணவர்கள் மோதல் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணைக்கு பிறகு தான் மோதல் தொடர்பாக முழுமையான தகவல் வெளியாகும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

* ஒரு போலீஸ்காரர்கூட இல்லையே…

சென்ட்ரல் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில் கல்லூரி மாணவர்கள் அரிவாள் மற்றும் கத்திகளுடன் குழுவாக மோதலில் ஈடுபட்டதை நேரில் பார்த்த பெண் ஒருவர் கூறுகையில், ‘நான் காலையில் 7 மணிக்கு கடையை திறந்து சுத்தம் செய்து கொண்டிருந்தேன். அப்போது 8.30 மணிக்கு 20 கல்லூரி மாணவர்கள் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில் சத்தத்துடன் ஓடினார்கள். அவர்கள் பின்னால் 20 மாணவர்கள் கத்தியுடன் ஓடினார்கள். பிறகு முன்னால் ஓடிய மாணவர்கள் திரும்ப ஓடி வந்த போது, பின்னால் ஓடிய மாணவர்கள் திருப்பி வெளியே ஓடி வந்தனர். அதில் ஒரு மாணவன் கால் தடுக்கி கீழே விழுந்தான் அவனை 4 பேர் கத்தியால் வெட்டினர். ஒரு பையன் குண்டா இருந்ததால் அவனால் ஓட முடியல.

அவனை மண்டையில் வெட்டிட்டானுங்க. கத்தி வைத்திருந்தவர்கள் பயப்படாமல் வெட்டினர். கத்தி கையில் இல்லாத பசங்கள் தான் பயந்து ஓடினாங்க.. இந்த இடத்திற்கு எவ்வளவு பேர் வராங்க… போராங்க…. ஒரு போலீஸ் கூட பாதுகாப்புக்கு இல்லை. அவனுங்க பொதுமக்கள் யாரையும் ஒன்றும் செய்யவில்லை. அவனுங்க குறிவைத்து தான் வெட்டினாங்க. அதை நேரில் பார்த்ததில் இருந்து நான் சாப்பிடக்கூட இல்லை. இன்னும் எனக்கு அந்த படபடப்பு அடங்கவே இல்லை. எல்லோரும் காலேஜி பசங்க தான், அவனுங்களுக்கு 20, 19, 18 வயதுக்குள் தான் இருக்கும். வெட்டிய பசங்க தினமும் இந்த வழியாகத்தான் வருவானுங்க. அதை தெரிந்து கொண்டு, கத்தியுடன் வந்த பசங்க அவனங்களை வெட்டியுள்ளனர்.

இந்த பகுதியில் எத்தனை பேர் நடந்து வருகிறார்கள். மாற்றுத்திறனாளிகளும் நடந்து வருகிறார்கள். ஒரு போலீஸ் போட்டு இருந்தால், அவனுங்க பயந்து இருப்பானுங்க. போலீஸ் யாரும் இல்லை என்று தெரிந்து தானே சர்வ சாதாரணமாக கத்தியை வைத்துக்கொண்டு ஓடுகின்றனர். வழக்கமாக இங்கு ெமட்ரோ ஊழியர்கள் 5, 6 பேர் இருப்பாங்க. அவங்களும் பயந்து கொண்டு ஓடிட்டாங்க. பசங்களை வெட்டுறாங்க.. அவங்களை தடுக்க யாருமே இல்லையே. 2 போலீஸ் பாதுகாப்புக்கு போட்டு இருந்தால் இது நடந்து இருக்காது. கட்டாயம் இந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும்’ என்றார்.

Related Stories: