சென்னை: ரூட் தல பிரச்னையில் சக கல்லூரி மாணவர்களை வெட்டிய வழக்கில் 8 பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில் நேற்று முன்தினம் காலை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் குழு மோதலில் ஈடுபட்டனர்.
இதில் சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களை கத்தி மற்றும் அரிவாளுடன் துரத்தி சென்று வெட்டினர். இதில் பச்சையப்பன் கல்லூரியில் பி.எஸ்சி முதலாமாண்டு படித்து வரும் சென்னை திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த நிதிஷ்குமார் (18), பி.காம் முதலாமாண்டு படித்து வரும் 17 வயது மாணவன் படுகாயமடைந்தனர். மோதலில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்ய கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர்.
திருமங்கலம் வி.ஆர்.மால் அருகே மாணவர்கள் சிலர் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி வந்தது தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் 7 மாணவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கம் செல்லும் மாணவர்களுக்கும், திருத்தணி மார்க்கம் செல்லும் மாணவர்களுக்கும் இடையே யார் ‘ரூட் தல’ என்ற பிரச்னை பல மாதங்களாக இருந்து வந்துள்ளது. அதில் இந்த மோதல் நடந்துள்ளது.
தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் கஞ்சா போதையில் இருந்துள்ளனர். இதை தொடர்ந்து 2 மாணவர்களை வெட்டிய பச்சையப்பன் கல்லூரியில் படித்து வரும் பி.ஏ வரலாறு முதலாமாண்டு படித்து வரும் திருத்தணியை ேசர்ந்த சரத்குமார் (19), ராணிப்பேட்டையை சேர்ந்த பிரகதீஷ் (18), அரக்கோணத்தை சேர்ந்த பி.ஏ எக்னாமிக் இரண்டாம் ஆண்டு படித்து வரும் புவனேஸ்வரன் (19), சதீஷ் (22), யுவராஜ் (20), சச்சின் (19), பிரசாந்த் (18), மதன்குமார் (18) ஆகிய 8 பேரை நேற்று கைது செய்தனர்.
