சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வரும் 28ம் தேதி நடைபெறவுள்ள 33-வது பட்டமளிப்பு விழாவில் முதலில் ’’வந்தே மாதரம்’’ தேசிய பாடலும், அடுத்து ’’ஜன கண மன” தேசிய கீதமும் பாடப்பட்ட பிறகு மூன்றாவதாகதான் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என்று அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசே வழிகாட்டுதல்களை வழங்கிய பிறகும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை 3வது இடத்திற்கு திட்டமிட்டு தள்ளுவது கண்டிக்கத்தக்கது. ஜனாதிபதி, ஆளுனர் பங்கேற்கும் மாநில அரசு விழாக்களில் முதலில் தேசிய பாடல், 2வதாக தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசு பிறப்பித்திருந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
கடந்த மே 10ம் நாள் தமிழக அரசு பதவியேற்கும் விழாவில் முதலில் தேசிய பாடல், பின்னர் தேசிய கீதம் ஆகியவற்றுக்கு அடுத்து 3வதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வரிசை முறைக்கு தமிழ்நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. அதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 9ம் தேதி பிறப்பித்த ஆணையில், மாநில பாடல்கள் பாடப்படும் விழாக்களில் அதுதான் முதலில் பாடப்பட வேண்டும்; அதன்பின் தேசிய பாடல்; 3வதாக தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதையும் மீறி வந்தே மாதரம் என்ற தேசிய பாடலைத்தான் முதலில் பாட வேண்டும் என்று ஆளுனர் மாளிகை கட்டாயப்படுத்துவது அப்பட்டமான அதிகார வெளிப்பாடு ஆகும்.
தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவரே மனோன்மணியம் சுந்தரம் பிள்ளைதான். அவரது பெயர்தான் நெல்லை பல்கலைக்கழகத்திற்கு சூட்டப்பட்டுள்ளது. அங்கும் கூட, ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்களையும் புறக்கணித்து விட்டு, வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வேண்டும் என்று ஆளுனர் மாளிகை கட்டாயப்படுத்துவதும், அதை பல்கலைக்கழக துணை வேந்தர் அப்படியே ஏற்றுக் கொள்வதும் சரியல்ல. இதை தமிழக அரசு வேடிக்கை பார்க்க கூடாது. தமிழ்நாட்டில் நடைபெறும் ஆளுனர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதலில் பாடப்பட வேண்டும். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விழாவிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட படுவதை தமிழ்நாடு அரசும், பல்கலைக்கழக நிர்வாகமும் உறுதி செய்ய வேண்டும்.
