திருவண்ணாமலை: திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலில் துவாரம் வழியாக நுழைந்து வழிபாடு செய்ய முயன்ற வாலிபர் மூச்சுதிணறி இறந்தார். திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயிலுக்கு மாதந்தோறும் பவுர்ணமி மற்றும் விஷேச நாட்களில் லட்சக்கணக்கான பக்தாகள் வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு கிரிவலம் செல்கின்றனர். அவ்வாறு கிரிவலம் செல்லும்போது கிரிவல பாதையில் உள்ள அஷ்டலிங்க சன்னதிகள், திருநேர்அண்ணாமலையார் கோயில், அடிஅண்ணாமலையார் கோயில், இடுக்குபிள்ளையார் கோயில்களிலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். குறிப்பாக இடுக்கு பிள்ளையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
நீண்ட வரிசையில் காத்திருந்து இடுக்குபிள்ளையார் கோயிலில் உள்ள சிறிய துவாரம் வழியாக தங்களது உடலை நுழைத்து வெளியே வந்து வழிபட்டு செல்வது வழக்கம். அதன்படி நேற்றும் கிரிவலம் வந்த ஏராளமான பக்தர்கள் இடுக்குபிள்ளையார் கோயிலில் குவிந்தனர். இதில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வெங்கடேசன் மகன் மணிக்குமார்(36) என்பவர் இடுக்கி பிள்ளையார் கோயில் துவாரம் வழியாக உள்ளே நுழைந்தார். அவர் உடல் பருமனாக இருந்த காரணத்தால் வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த பக்தர்கள் நீண்ட நேரம்போராடி அவரை வெளியே கொண்டுவந்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
