*விவசாயிகள் கோரிக்கை நிறைவேறுமா?
வெள்ளக்கோவில் : தமிழகத்தில் கொடி முருங்கை, செடி முருங்கை, மர முருங்கை,செம்முருங்கை என நான்கு வகை முருங்கைகள் உள்ளன. இவற்றில் திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில், முத்தூர்,காங்கயம்,புதுப்பை,மூலனூர் பகுதிகளில் செடி முருங்கை, மர முருங்கை ஆகியவை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
இந்தப் பகுதிகளில் விளையும் முருங்கைக்காய்கள் சத்துள்ளதாகவும், மருத்துவ குணம் கொண்டுள்ளதாகவும் இருக்கும். எனவே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வர்த்தகர்கள் வெள்ளக்கோவில், சந்தைகளுக்கு வந்து முருங்கைக்காய்களை கொள்முதல் செய்து வந்தனர். மேலும் இங்கிருந்து வெளிநாடுகளுக்கும் முருங்கைக்காய் ஏற்றுமதி செய்யப்பட்டது.
இதன் காரணமாக மூலனூர், வெள்ளக்கோவில் பகுதிகளில் முருங்கை சாகுபடி பரப்பு அதிகமானது. நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் 3 ஆயிரம் ஏக்கரில் முருங்கை சாகுபடி செய்யப்படுகிறது. இந்த நிலையில் மூலனூர், வெள்ளக்கோவில் முருங்கைக்காயின் ருசியை விரும்பிய பெங்களூரு, மைசூரு, விஜயவாடா பகுதி வர்த்தகர்கள் இதன் விதையைப் பெற்று தங்கள் பகுதியிலேயே பயிரிட்டனர்.
இதையடுத்து, அந்தப் பகுதியினர் முருங்கைக்காய் கொள்முதல் செய்ய இங்கு வருவதை நிறுத்திவிட்டனர். இதன் காரணமாக வெள்ளக்கோவில் பகுதியிலிருந்து பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படும் முருங்கைக்காய்களின் அளவு வெகுவாகக் குறைந்தது.
இதனால், இந்தப் பகுதியில் விளையும் முருங்கைக்காய்களை ஒட்டன்சத்திரம், சென்னை போன்ற பெரிய சந்தைகளுக்கு கொண்டு சென்று தற்போது விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். இதனிடையே, வெள்ளக்கோவிலில் முருங்கைக்காய் பவுடர் தொழிற்சாலை அமைக்க வேண்டுமென்று விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
முருங்கைக்காய் வரத்து அதிகமானால் ஒரு கிலோ ரூ.2க்கும், வரத்து குறைந்தால் ஒரு கிலோ ரூ.50, ரூ.70, ரூ.100 வரையும் விற்கிறது. விலை அதிகம் இருக்கும்போது, சாகுபடி பரப்பு குறைவாக இருக்கும் அல்லது காற்று மழையால் பாதிக்கப்பட்டு இருக்கும்.
தினமும் பல டன் முருங்கை விளையும் நிலையில் விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்காமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே முருங்கைக்காய் பவுடர் தொழிற்சாலை அமைத்தால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யமுடியும். மேலும் முருங்கைக்காய்களை சேமித்து விற்பனை செய்ய அரசு ஒரு குளிர்பதன கிடங்கு அமைத்து கொடுத்தால் சேமித்து வைத்து விற்பனை செய்யும்போது விவசாயிகளுக்கு நியாயமான விலை எப்போதும் கிடைக்கும்.
பல ஆண்டுகளாக முருங்கை விவசாயிகள் இது தொடர்பாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் கோரிக்கையை தவெக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து வெள்ளக்கோவில் முருங்கை விவசாயிகள் கூறியதாவது: வெள்ளகோவில், மூலனூர் பகுதியில் தினமும் 100 டன் முருங்கைக்காய்கள் விளைகின்றன. விலையில் ஏற்றத்தாழ்வு அடிக்கடி நிகழ்வதால், விவசாயிகள் காய் பறிப்பு கூலியே கொடுக்க முடியாமல் தவிக்கும் நிலை உள்ளது. முருங்கைக்காய்களை காயவைத்து பவுடராக மாற்றும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறோம்.
முருங்கைக்காய் பவுடரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலமாக இந்தப் பகுதி விவசாயிகள் வளம் பெறுவதுடன் அரசுக்கும் வருவாய் கிடைக்கும். பல்வேறு சிறப்புகள் கொண்ட இந்த பகுதி முருங்கைக்காயின் பயனை அனைவரும் பெறும் வகையில், இங்கு முருங்கைக்காய் பவுடன் தொழிற்சாலை அல்லது முருங்கைக்காய் குளிர்பதன கிடங்கு அமைக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
