*மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்ற மக்கள் வலியுறுத்தல்
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா பசுபதி கோவில் ஊராட்சி பட்டித்தோப்பு சாலையில் மது கடை இயங்கி வருகிறது.இந்த பட்டிதோப்பு சாலை கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியிலிருந்து பள்ளி கல்லூரிகளுக்கு செல்லக்கூடிய மாணவிகளும் , அன்றாட வேலைக்குச் செல்லக்கூடிய பெண்களும் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தினந்தோறும் இந்த சாலைகள் வழியாக வாகன ஓட்டிகள், பெண்கள் செல்லும்போது மது பிரியர்கள் மது பாட்டில்களை வாங்கி கொண்டு சாலையில் அமர்ந்தும், வீடுகள் முன்பும் அமர்ந்து கொண்டு மது அருந்திவிட்டு அவ்வழியாக வரக்கூடிய கல்லூரி, பள்ளி மாணவிகளையும் பெண்களையும் வழிமறித்து பாலியல் சீண்டல்கள் மற்றும் பல்வேறு அச்சுறுத்தலுக்கு ஆளாக்குவதுடன் சில நேரங்களில் திருட்டு சம்பவம் அரங்கேறி வருவதாகவும் அந்தப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல் இந்த கிராமத்தில் உள்ள குடியிருப்பு வாசிகள் பலமுறை காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என இந்தப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் இந்த குடியிருப்பு வாசிகளுக்கு எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் தினந்தோறும் இந்த மது பிரியர்களால் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.
குறிப்பாக தமிழக முதல்வருக்கு புகார் மனு கடிதமும் அனுப்பி உள்ளனர். ஆனால் இதுநாள் வரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என்று இந்த கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே தமிழக முதல்வர் பள்ளி, கல்லூரி மாணவிகள், பெண்களின் நலன் கருதி உடனடி நடவடிக்கை மேற்கொண்டு பட்டித்தோப்பு சாலையில் இயங்கி வரும் மதுக்கடையை வேற்று இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
