அசாமில் வெள்ளப்பெருக்கு; ஒரே நாளில் 10 பேர் பலி: 6.53 லட்சம் பேர் பாதிப்பு

 

திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. 11 மாவட்டங்களை வெள்ளம் கடுமையாக பாதித்துள்ளது. இதுவரை வெள்ளம் மற்றும் கனமழையால் 41 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்ததுடன், 6.53 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த சில நாட்களுக்கு மேலும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், நிலைமை சீரடைவதற்கான அறிகுறிகள் குறைந்துள்ளன. இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று கனமழைக்கான ‘ஆரஞ்சு எச்சரிக்கை’ விடுத்து, மக்களை பேரிடருக்கு தயாராக இருக்குமாறு அறிவுறுத்தியது. மேலும், சில இடங்களில் இடியுடன் மழை மற்றும் பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் அடுத்த 4 நாட்களுக்கு ‘மஞ்சள் எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரம்மபுரத்திரா உள்ளிட்ட பல முக்கிய நதிகளில் வெள்ளப்பெருக்கு அபாய கட்டத்தை தாண்டி ஓடுகிறது. அடுத்த சில நாட்களுக்கு பல பகுதிகளில் மேலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது. சிவசாகர், சாரைடியோ, தேமாஜி, திப்ருகர், கோலாகாட், ஹோஜாய், ஜோர்ஹாட், காம்ரூப், காம்ரூப் பெருநகரம், கார்பி ஆங்லாங் மற்றும் நாகான் ஆகிய மாவட்டங்களில் 6,53,100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. சிவசாகர் மாவட்டத்தில் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாநில அரசின் அறிக்கையின்படி, அசாம் முழுவதும் 939 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 24,897.27 ஹெக்டேர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளன. 10 மாவட்டங்களில் 487 தங்குமிடங்கள் மற்றும் நிவாரண விநியோக மையங்களை மாநில நிர்வாகம் இயக்கி வருவதாகவும், இதன் மூலம் 24,418 பேருக்கு பராமரிப்பு மற்றும் உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Stories: