முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை பகுதியில் கடல் வழியாக தீவிர வாதிகள் ஊடுருவல்கள் இருக்கிறதா என இன்று காலை முதல் சாகர் கவாச் 2026 ஆப்ரேஷன்’ என்ற பெயரில் நடைபெறும் 2 நாள் போலீசார் பாதுக்காப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். நாளை இரவு வரை நடைபெறுகிறது.
இந்திய கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி, தாக்குதல் நடத்துவதை தடுக்கும் பொருட்டு, கடலோர கிராமங்களில் அரசு சார்பில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் சரியாக நடக்கிறதா? என்பதை பரிசோதிக்கும் வகையில், இந்திய கடலோர காவல் படையினர், தமிழக மரைன் போலீசார் மற்றும் மாநில போலீசார் இணைந்து கடந்த ஆண்டுகளில் அப்ரேஷன் அம்லா, சாகர் கவாச் (கடல்கவசம்), ‘சி விஜில் ஆகிய பெயரில் ஒத்திகை பயிற்சி தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேசம், புதுச்சேரி மாநில கடலோரப்பகுதிகளில் இரண்டு நாட்கள் வருடம் வருடம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு இந்த வருடத்தின் முதல் சாகர் கவாச் 2026 ஆப்ரேஷன்’ என்ற ஒத்திகை இன்று காலை முதல் துவங்கி நாளை இரவு வரை நடைபெறுகிறது.
இதனையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் கடற்கரை சார்ந்த முத்துப்பேட்டை மற்றும் அருகே உள்ள ஜாம்புவானோடை, செங்காங்காடு, தில்லைவிளாகம், இரும்பாவனம், தொண்டியக்காடு, பேட்டை, தம்பிக்கோட்டை கிழக்காடு உட்பட பல பகுதியில் சாகர் கவாச் 2026 ஆப்ரேஷன்’ ஒத்திகை இன்று காலை துவங்கியது. அதன்படி முத்துப்பேட்டையில் பல்வேறு பகுதிகளில் போலீசார் பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இதில் இடும்பாவனம், தில்லைவிளாகம், கோபாலசமுத்திரம், தம்பிக்கோட்டை கீழக்காடு, பேட்டை உள்ளிட்ட பகுதியில் உள்ள போலீஸ் செக்போஸ்டில் பலத்த போலீஸ் பாதுக்காப்பு போடப்பட்டது. நகரில் பழைய பேருந்து நிலையம், ஆசாத்நகர் போன்ற முக்கிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் போலீசார் சிறப்பு வாகன ரோந்தில் ஈடுபட்டனர். இதனை திருவாரூர் எஸ்பி சதீஷ்குமார், மேற்பார்வையில் ஏடிஎஸ்பி அருட்செல்வன், முத்துப்பேட்டை டிஎஸ்பி ராஜு ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப்,இன்ஸ்பெக்டர்கள் என சுமார் நூறுக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் கடலோர காவல்படை போலீசார் பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்து பார்வையிட்டனர்.
அதேபோல் முன்னதாக முத்துப்பேட்டை கடலை ஒட்டி அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரிய காடான அலையாத்திக்காடு மற்றும் லகூன் பகுதியில் முத்துப்பேட்டை கடலோர காவல்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேஸி, சப்.இன்ஸ்பெக்டர் ரகுபதி ஆகியோர் தலைமையில் கடலோர காவல்படை போலீசார் படகில் சென்று மீனவர்கள் படகு சுற்றுலா பயணிகள் செல்லும் படகுகள் மற்றும் படகுதுறை, அதேபோல் காட்டில் உள்ள சுற்றுலா பயணிகள் தாங்கும் பகுதியில் தீவிரவாதிகள் சமூக விரோதிகள் யாரும் இருகிறார்களா? என்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மீன்வளத்துறை மற்றும் கடலோர காவல் குழும அதிகாரிகள் உடனிருந்தனர்.
இந்தநிலையில் இந்த சாகர் கவாச் 2026 ஆப்ரேஷன்’ ஒத்திகையில் ஒரு ஏடிஎஸ்பி, டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்கள் என திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, முத்துப்பேட்டை ஆகிய பகுதியை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட போலீசார், அதுமட்டுமின்றி 30 க்கும் மேற்பட்ட கடலோர காவல்படை போலீசார் மற்றும் சிறப்பு போலீசார், மற்றும் ஊர்க்காவல் படை போலீசார் இந்த ஒத்திகையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஒத்திகை குறித்து மக்களுக்கு தெரியாததால் என்னா நடக்கிறது? என்று தெரியாமல் இன்று காலை முதல் மக்கள் மத்தியில் பீதி குழப்பம் ஏற்பட்டு முத்துப்பேட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பாதுகாப்பு ஒத்திகை நாளை இரவு வரை நடைபெறுகிறது.
