புதுடெல்லி: குடும்பத் தகராறில் 6 மாதத்தில் 554 ஆண்கள் கொலை செய்யப்பட்டதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. ஊடகங்களில் வெளியான செய்திகள் மற்றும் தங்களது கள ஆய்வில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் அரியானா மாநிலம் குருகிராமைச் சேர்ந்த ஏகம் நியாய் அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனம், ஜூலை 14 வரை திரட்டிய புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 6 மாதங்களில் மட்டும் 322 கணவர்கள் அவர்களது மனைவிகளாலோ அல்லது மனைவியின் கள்ளக்காதலர்களாலோ கொலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், குடும்பத் தகராறு, பொய் வழக்கு, வரதட்சணை புகார்கள் போன்ற மன உளைச்சல்களால் 232 கணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இதன் மூலம், இந்தியாவில் நாளொன்றுக்கு சராசரியாக இரண்டு கணவர்கள் படுகொலை செய்யப்படுவதும், ஒரு கணவர் தற்கொலை செய்து கொள்வதும் கண்டறியப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், கணவர்கள் படுகொலை செய்யப்பட்ட 322 வழக்குகளில், 60.2 சதவீத வழக்குகளுக்கு கள்ளக்காதலே முதன்மைக் காரணமாக இருந்துள்ளது. மனைவியின் கள்ளக்காதலை கணவர் கண்டித்ததாலோ அல்லது அவர்களின் உறவுக்கு இடையூறாக இருந்ததாலோ, கள்ளக்காதலனுடன் இணைந்து மனைவியே கணவரைக் கொலை செய்யச் சதித்திட்டம் தீட்டியது ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதேபோல், பதிவான 232 கணவர்களின் தற்கொலைகளுக்குப் பின்னால் இருக்கும் காரணங்களும் கண்டறியப்பட்டுள்ளன. தற்கொலைகளில் 104 வழக்குகள் நீண்டகால குடும்பத் தகராறால் நிகழ்ந்துள்ளன. மனைவி மற்றும் மாமனார் வீட்டாரின் சித்ரவதை காரணமாக 57 பேரும், மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தால் 29 பேரும் தற்கொலை செய்துள்ளனர். மேலும், பொய் வழக்குகள், காதலி அல்லது அவரது குடும்பத்தினரின் மிரட்டல் போன்றவையும் தற்கொலைகளுக்குக் காரணமாக அமைந்துள்ளன.
பல தற்கொலைகளில், தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து ஆண்கள் விரிவான கடிதம், வீடியோ பதிவுகளை விட்டுச் சென்றுள்ளனர். இதில் உத்தரப் பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 93 கணவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 103 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, மகாராஷ்டிரா, அரியானா, பீகார், கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் உள்ளன என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
