இந்தியாவில் முதல் டெங்கு தடுப்பூசி ‘கியூடெங்கா’வுக்கு DCGI ஒப்புதல்; உலக சுகாதார அமைப்பும் பரிந்துரை!

டெல்லி: இந்தியாவில் ஆண்டுதோறும் பருவமழைக்குப் பிறகு தீவிரமடையும் டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கான முதல் தடுப்பூசியான ‘கியூடெங்கா’வுக்கு (QDENGA) இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் (DCGI) அனுமதி வழங்கியுள்ளது. ஜப்பானைச் சேர்ந்த பிரபல ‘டகேடா’ (Takeda) மருந்து நிறுவனம் தயாரித்துள்ள இந்தத் தடுப்பூசி, இந்தியாவில் 4 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களுக்குப் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உலகில் பதிவாகும் டெங்கு பாதிப்புகளில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் மட்டுமே ஏற்படுவதால், இந்தத் தடுப்பூசி அனுமதி நாட்டின் பொது சுகாதார மேம்பாட்டில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்பு சந்தைக்கு வந்த டெங்கு தடுப்பூசிகள் போலல்லாமல், ‘கியூடெங்கா’ தடுப்பூசியைச் செலுத்திக் கொள்வதற்கு முன்னதாக எவ்வித முன் கூட்டிய இரத்தப் பரிசோதனையும் செய்யத் தேவையில்லை என்பது இதன் சிறப்பம்சமாகும். ஒருவருக்கு ஏற்கனவே டெங்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் அல்லது இதுவரை வராவிட்டாலும் யார் வேண்டுமானாலும் இந்த ஊசியைப் போட்டுக் கொள்ளலாம். இந்தத் தடுப்பூசி மூன்று மாத இடைவெளியில் இரண்டு டோஸ்களாக, செலுத்தப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டெங்கு வைரஸில் உள்ள நான்கு வகையான பிரிவுகளுக்கும் (Serotypes) எதிராகச் செயல்படும் இந்தத் தடுப்பூசி, மருத்துவப் பரிசோதனைகளில் மிகச் சிறந்த முடிவுகளைத் தந்துள்ளது. டெங்கு காய்ச்சல் காரணமாக நோயாளிகள் தீவிரமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபாயத்தை இது 90.4% வரை குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும், தடுப்பூசி செலுத்திய ஏழு ஆண்டுகள் வரை இதன் வீரியமும் பாதுகாப்பும் உடலில் நிலைத்திருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பும் (WHO) இந்தத் தடுப்பூசிக்குப் பாதுகாப்புச் சான்றிதழ் வழங்கி, டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் தங்களது பொதுத் தடுப்பூசித் திட்டங்களில் இதனைப் பயன்படுத்தலாம் எனப் பரிந்துரைத்துள்ளது. பிரேசில், இந்தோனேசியா உட்பட 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்தத் தடுப்பூசி ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: