புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயில் நன்கொடை நிதியில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உட்பட அனைத்து பொதுநல வழக்குகளும் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் திஜாய்மால்யா பாக்சி மற்றும் வி.மோகனா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ‘‘ராமர் கோயில் நிதி முறைகேடு குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். ஆன்லைன் மூலம் பெறப்பட்ட நன்கொடைகள், ரசீதுகள் மற்றும் கணக்கு வழக்குகளைப் பகிரங்கமாக பொதுவெளியில் வெளியிட உத்தரவிட வேண்டும். இதுகுறித்து உச்ச நீதிமன்றம் ஒரு விரிவான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது, ‘‘ராமர் கோயில் சம்பவத்தை அரசியலாக்க வேண்டாம். நீதிமன்றங்கள் அரசியல் செய்வதற்கான இடம் கிடையாது. இது ஒரு குற்றவியல் வழக்கு ஆகும். இதில் முறையான விசாரணை நடப்பதை உறுதி செய்வதே நீதிமன்றத்தின் பணி ஆகும். எனவே இந்த விவகாரம் தொடர்பாக தற்போது வரையில் நடத்தப்பட்ட விசாரணை குறித்த அறிக்கையை உத்தரப்பிரதேச அரசு தாக்கல் செய்துள்ளது.
இருப்பினும் தொடர்ந்து விசாரணையை யார் நடத்தி வருகிறார்கள் என்று தலைமை நீதிபதி கேட்டார். அதற்கு பதிலளித்த உத்தரப்பிரதேச அரசுத் தரப்பில் ஆஜராகி இருந்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘வழக்குப்பதிவு செய்யத்தக்க குற்றம் நடந்துள்ளதா என்பதைக் கண்டறியவே முதற்கட்ட எஸ்.ஐ.டி அமைக்கப்பட்டது. தற்போது காவல்துறை விசாரித்து வருகிறது என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள், ‘‘வழக்கை முழுமையாக விசாரிக்க மூத்த அதிகாரிகள் அடங்கிய புதிய சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைப்பது குறித்து அரசிடம் ஆலோசித்துத் தெரிவிக்குமாறு உத்தரவிட்டனர். அதற்கு அரசுத் தரப்பும் ஒப்புதல் அளித்தது. இதைத்தொடர்ந்து மீண்டும் குறுக்கிட்ட மனுதாரர் வழக்கறிஞர், ‘‘நன்கொடை ரசீதுகள் மற்றும் வங்கியின் டிஜிட்டல் சான்றுகள் அழிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
இதற்குப் பதிலளித்த சொலிசிட்டர் ஜெனரல், அனைத்துப் பதிவுகளும் பாதுகாப்பாகப் பராமரிக்கப்பட்டு வருவதாக உறுதியளித்தார். அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், புதிய எஸ்.ஐ.டி குழு குறித்த அறிக்கையை பெற்றுக்கொண்டு வரும் ஜூலை 27ம் தேதி வழக்கில் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பிப்பதாகக் கூறி விசாரணையை ஒத்திவைத்தது.
