கீவ்: கடந்த 9 நாட்களில் அசோவ் கடல் பகுதியில் ரஷ்ய நாட்டின் சுமார் 116 கப்பல்கள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி உள்ளது. உக்ரைனின் ஆளில்லா படைப்பிரிவு (Unmanned Systems Forces) கட்டுப்பாட்டில் உள்ள ட்ரோன்கள், கடந்த ஒன்பது நாட்களில் அசோவ் கடலில் 116 ரஷ்ய கப்பல்களை குறி வைத்து தாக்கியுள்ளதாக அப்படையின் தளபதி மேஜர் ராபர்ட் ப்ரோவ்டி தகவல் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய கப்பல்கள் மீதான தங்கள் தாக்குதலின் நோக்கம் குறித்து பேசிய ராபர்ட் ப்ரோவ்டி, ரஷ்யாவின் கப்பல்களை மூழ்கடிப்பதற்குப் பதில், அவற்றை செயலிழக்க செய்து, இயங்க முடியாத நிலையில் கடலில் மிதக்க விடுவதே எங்கள் நோக்கம் என்று கூறினார். வோல்கா-டான் கால்வாய் மற்றும் அசோவ் கடலுடன் இணைக்கப்பட்ட துறைமுகங்களிலிருந்து கருங்கடலில் ஆழ்கடலில் காத்திருக்கும் பெரிய டேங்கர் கப்பல்களுக்கு எண்ணெயைக் கொண்டு செல்லப் பயன்படும் ரஷ்யாவின் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான டேங்கர் கப்பல்களின் தொகுப்பை முடக்குவதும் எங்களின் நோக்கமாகும் என்றும் ப்ரோவ்டி குறிப்பிட்டார்.
தாங்கள் தாக்கி இருப்பவற்றில் எண்ணெய் டேங்கர்கள், சரக்குக் கப்பல்கள் மற்றும் இழுவை படகுகள் அடங்கும் என்றார். நாங்கள் நடத்தி இருக்கும் தாக்குதல்கள் கிரீமியாவிற்கான எரிபொருள் விநியோகத்தைச் சிக்கலாக்கும். மேலும் எங்களின் தாக்குதல்களுக்கு எளிதில் இலக்காகக்கூடிய சாலை மற்றும் ரயில் போக்குவரத்தை ரஷ்யா அதிகம் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
மேற்கு ஆசியாவில் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவியதைப் போன்றதொரு சூழல் மீண்டும் உருவாகியுள்ள நிலையில், அசோவ் கடலில் உள்ள கப்பல்கள் மீது உக்ரைன் தீவிர ட்ரோன் தாக்குதல்களை நடத்தி இருப்பதை தொடர்ந்து, மாற்று கப்பல் வழித்தடங்களில் தங்கள் கப்பல்களை இயக்க தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
