சென்னை: பழனி கோயில் நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவிக்; பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான ரூ. 100 கோடி மதிப்பிலான கோவில் நிலம், வெறும் ரூ. 2 கோடி மதிப்பிற்கு தனியார் பெயருக்கு மாற்றப் பட்டிருப்பது என்பது ஏதோ Clerical Error போல இந்த பொய்க்கால் குதிரை அரசு கடக்க முயல்வது ஏற்புடையதல்ல. தவறு நடந்திருப்பதை அமைச்சரே ஒப்புக்கொண்டு இருப்பதால், இது மிகப்பெரிய ஊழல்.
இந்த பத்திரப் பதிவு குறித்த விவரங்கள் ஏன் பொதுவெளியில் வரவில்லை? யார் பெயரில் இந்த நிலம் மாற்றப்பட்டது? அந்த நபர் இந்த வழக்கில் குற்றவாளி இல்லையா? இவ்வளவு பெரிய ஊழல், அதுவும் பழனி முருகப் பெருமானின் சொத்தையே வளைத்து போடும் நோக்கத்தில் நடந்திருக்கிறது. இவ்வளவு பெரிய பத்திரப் பதிவு நடக்கிறது என்றால், அதை ஏதோ ஒரு Powercenter தான் முன்னின்று இதற்கான உத்தரவுகளை கொடுத்திருக்க வேண்டும். தனது ஆட்சியில் தான் மட்டுமே Powercenter என்று சொன்ன முதல்வர் விஜய் அவர்களே, இந்த ஊழலில் பின்னால் #யார்_அந்த_Powercenter?
அதுவும், முதலில் ஒரு சார்பதிவாளர் இதனை பதிவு செய்ய இயலாது என மறுத்த நிலையில், அவர் மாற்றப்பட்டு, வேறு ஒரு அதிகாரி நியமிக்கப்பட்ட பிறகு இந்த பத்திரப் பதிவு நடைபெற்றது என்றால், இந்த பத்திரப் பதிவிற்காக தான் புதிய அதிகாரியே வந்தாரா? அந்த அளவிற்கு அதிகாரியையே மாற்றி காரியத்தை முடிக்கும் அளவிற்கு #யார்_அந்த_Powercenter? இதனை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள CBCID விசாரிப்பது என்பது, இந்த கேள்விகளுக்கு உண்மையான பதிலைத் தராது.
நேர்மையான விசாரணை நடைபெற, பழனி முருகன் கோவில் சொத்து முறைகேடு வழக்கை CBI விசாரிக்க உடனடியாக இந்த அரசு மாற்றிட வேண்டும் என முதலமைச்சரை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
