எ.வ.வேலு மீதான லுக் அவுட் நோட்டீஸ் விவகாரம்; தமிழ்நாடு அரசின் மனு தள்ளுபடி: லஞ்ச ஒழிப்புத்துறை கோரிக்கையை சுப்ரீம்கோர்ட் நிராகரிப்பு

புதுடெல்லி: முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் லஞ்ச ஒழிப்புத்துறையின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்துள்ளனர். தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலைகளை மேம்படுத்த அரசு 5,000 கோடி ரூபாயை ஒதுக்கியிருந்தது. இந்த திட்டத்தில், கரூர் மாவட்டத்தில், கீழ் பணிகள் ஏதும் மேற்கொள்ளப்படாமல் தனியார் நிறுவனங்களுக்கு தொகைகள் விடுவிக்கப்பட்டு, ரூ.3 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், கான்ட்ராக்டர்களுக்கு எதிராக, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் சிகிச்சைக்காக எ.வ.வேலு வெளிநாடு சென்ற நிலையில், அவரை தேடப்படும் நபராக அறிவித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து எ.வ.வேலு தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு, வரும் 27ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டதோடு, அதுவரை கடும் நடவடிக்கைகள் ஏதும் எடுக்க கூடாது எனக்கூறி அவரது லுக் அவுட் நோட்டீசுக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு சிங்கப்பூரிலிருந்து சென்னை திரும்பிய எ.வ.வேலு, ‘நான் எங்கும் ஓடி மறையவில்லை, மருத்துவ சிகிச்சைக்காகத்தான் சென்றேன். அதற்கான ஆதாரமும் என்னிடத்தில் உள்ளது’ என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த இடைக்கால தடை உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவானது நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதாடுகையில், ‘இந்த விவகாரத்தை பொறுத்தமட்டில் வழக்கை ரத்து செய்யக்கோரிய மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், எங்களது கோரிக்கையின் மீது தேவையில்லாமல் உத்தரவை பிறப்பித்துள்ளது. குறிப்பாக எதிர்மனுதாரர் தன் மீதான குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை தொடங்கியவுடன், மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் சிங்கப்பூர் சென்று தங்கிவிட்டார். அதை அடிப்படையாக கொண்டுதான் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. எனவே, விசாரணைக்கு எ.வ.வேலு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட வேண்டும்’ என்று கூறினார். இதற்கு எ.வ.வேலு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கடும் எதிர்ப்பை பதிவு செய்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘இந்த விவகாரம் தற்போது வரை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதற்குள் ஏன் உச்ச நீதிமன்றத்திற்கு வந்தீர்கள், அப்படி என்ன அவசரம்? மேலும் மருத்துவ சிகிச்சை முடிந்த பின்னர் எ.வ.வேலு மீண்டும் சென்னை திரும்பிவிட்டார் என்று கூறுகிறீர்கள், அப்படியென்றால் லஞ்ச ஒழிப்புத்துறை அவரிடம் விசாரணை நடத்தலாமே, அதில் உங்களுக்கு என்ன பிரச்னை இருக்கிறது? எதிர்மனுதாரரும் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக தெரிவித்துள்ளனர்.
அவர்களது தரப்பிலும் எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. அப்படியென்றால் இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என்ற கேள்விதான் எங்களுக்கு எழுகிறது.

குறிப்பாக பாஸ்போர்ட் ஒப்படைப்பு விவகாரத்தை பொறுத்தவரையில் லஞ்ச ஒழிப்புத்துறையின் கோரிக்கையை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடக்கும்போது முறையிடுங்கள். எங்களை பொறுத்தவரை இந்த விவகாரத்தில் நாங்கள் தற்போது எந்தவித உத்தரவையும் பிறப்பிக்க விரும்பவில்லை’ என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். அத்துடன், தமிழ்நாடு அரசின் அனைத்து கோரிக்கைகளையும் முழுமையாக நிராகரித்த நீதிபதிகள், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

எ.வ.வேலுவிடம் விசாரணை
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் திருவண்ணாமலையில் 4 இடங்கள், கரூரில் 7 இடங்கள், திண்டுக்கல், கோவை தலா 2 இடங்கள், திருப்பூரில் ஒரு இடம் என மொத்தம் 20 இடங்களில் சில நாட்களுக்கு முன்னர் சோதனை நடந்தது. இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.40 லட்சம் ரொக்கம், வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள், மின்னணு ஆதாரங்கள் சிக்கியது.

இதுதொடர்பாக, விளக்கம் அளிக்க முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஏற்கனவே திட்டமிட்டப்படி வெளிநாட்டில் மருத்துவ சிகிச்சைக்கு செல்ல இருந்ததால் நேரில் ஆஜராக முடியவில்லை. பின்னர் அவர் வெளிநாட்டில் இருந்து சிகிச்சை முடிந்து சென்னை திரும்பியதும், லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் இன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியது.

அந்த சம்மனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு இன்று காலை 10.30 மணிக்கு சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் விசாரணை அதிகாரிகள் முன்பு நேரில் ஆஜரானார். அவரிடம் வழக்கு தொடர்பாக சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் படி, அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Related Stories: