டெல்லி; நடைபாதை வசதி கொண்ட இந்திய நகரங்களின் பட்டியலில் உத்திரபிரதேச மாநிலத்தின் லக்னோ முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தின் தலைநகரமான சென்னை இந்த பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளது. இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள நடைபாதைகளின் தரம், அவற்றின் உட்கட்டமைப்பு மற்றும் அந்த நடைபாதைகள் மக்கள் நடப்பதற்கு ஏதுவாக உள்ளதா என்பதை பற்றி எல்லாம் விளக்கும் வகையில் “State of Indian Streets 2026” என்ற அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது.
2026-ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவின் சாலைகள் வேகமாக விரிவடைந்து வருகின்றன. ஆனால், அதிக போக்குவரத்து நெரிசலும், பாதசாரிகளுக்கான பாதுகாப்பற்ற சூழலும் இன்னும் பெரிய சவாலாகவே நீடிக்கின்றன. இந்தியாவின் முக்கிய நகரங்களில் வெறும் 13.2% சாலைகளில் மட்டுமே மக்கள் நடப்பதற்கேற்ற நடைபாதைகள் உள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
உத்திரபிரதேச மாநிலமான லக்னோவில் நடைபாதை வசதிகள் 28 சதவீதம் சரியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டு, பட்டியலில் முதலிடம் வழங்கப்பட்டு உள்ளது. 25.9 சதவீதத்துடன் பெங்களூரு இரண்டாம் இடமும், தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத் 15.1 சதவீதத்துடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன. நான்காம் இடம் பிடித்துள்ள சென்னையில் 13.9 சதவீதம் மட்டுமே முறையான நடைபாதை வசதிகள் இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
