புதுடெல்லி: பொது இடங்களில் மாடு மற்றும் கன்றுகளை வெட்ட தடை விதித்த உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பொது இடங்களில் கன்றுகள் மற்றும் மாடுகளை வெட்டுவதற்கு தடை விதிக்கக் கோரி, கோயம்புத்தூரைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சியின் இளைஞர் அணி பொதுச்செயலர் சூர்யபிரசாந்த் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, கடந்த ஜூன் 27ம் தேதியன்று தீர்ப்பளித்தது.
அந்த தீர்ப்பில், பக்ரீத் பண்டிகையின் போதோ அல்லது வேறு எந்த நாள்களிலோ அனுமதிக்கப்பட்ட இறைச்சிக் கூடங்களைத் தவிர, மற்ற பொது இடங்களில் மாடு மற்றும் கன்றுகளை பலியிடக் கூடாது என தடை விதிக்கப்பட்டது. மேலும், விலங்கு நலச் சட்டங்களின்படி தகுதி வாய்ந்த அதிகாரியால் சான்றளிக்கப்பட்ட, வயது முதிர்ந்த அல்லது நோய்வாய்ப்பட்ட விலங்குகளை மட்டுமே வெட்ட அனுமதிக்க வேண்டும் என்றும், இந்த உத்தரவை அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், போலீசாரும் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது. பக்ரீத் பண்டிகை சமயத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவானது உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தனது வாதத்தில், ‘பொது இடங்களில் பசுக்கள் கொல்லப்படுவதைத் தடுக்கக் கோரி மட்டுமே மனுதாரர் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், அதனைத் தாண்டி பக்ரீத் பண்டிகை அல்லது வேறு எந்த நாளிலும் பசுக்கள் மற்றும் கன்றுகள் பலியிடப்படுவதற்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க வேண்டுமா என்பது குறித்து பரிசீலிக்க வேண்டியுள்ளது. மேலும், இந்த உத்தரவின் மூலம் இறைச்சிக் கூடங்களிலும் பசு வதைக்கு முழுமையான தடையை நீதிமன்றம் விதித்துள்ளது.
குறிப்பிடப்பட்ட இறைச்சிக் கூடங்களைத் தவிர வேறு எந்த இடத்திலும் விலங்குகளை வெட்டுவதற்கு அதிகாரிகள் அனுமதிக்கக் கூடாது. பக்ரீத் பண்டிகையின் முந்தைய நாள் அல்லது வேறு எந்த நாளிலும் பசுவோ, கன்றோ வதைக்கப்படாமல் இருப்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவானது விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் 1960ம் ஆண்டு, விலங்குகள் வதை தடுப்பு விதிகள் 2001ம் ஆண்டு மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் ஆகியவற்றின் விதிகளுக்கு முரணாக உள்ளதால், இதற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார். இந்த வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக எதிர்மனுதாரர் பதிலளிக்க உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பினர். மேலும், கன்றுகள் மற்றும் மாடுகளை வெட்ட தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஒத்திவைத்தனர்.
