சோளிங்கர், மேல்விஷாரம் நகராட்சிகளில் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடும் பணி

ஆற்காடு : மேல்விஷாரம், சோளிங்கர் நகராட்சிகளில் தெருநாய்களுக்கு ரேபிஸ் வெறிநோய் தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகிறது.ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகராட்சி ஆணையர் மேகலா தலைமையில் நகராட்சி தலைவர் குல்ஜார் அஹமத், துணைத் தலைவர் ஜபர் அஹமத் ஆகியோர் முன்னிலையில் மேல்விஷாரம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் உள்ள தெருக்களில் பொதுமக்களுக்கு நாய்களால் ஏற்படும் தொல்லைகளை கட்டுப்படுத்தும் பொருட்டு வெறிநோய் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

அதேபோல் மேல்விஷாரம் நகராட்சிக்குட்பட்ட 2,6,7,10 ஆகியவார்டுகளில் உள்ள தெருக்களில் வீடுகளில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளுக்கும், தெருகளில் சுற்றி திரியும் நாய்களுக்கும் கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குனர் திருநாவுக்கரசு மேற்பார்வையில் உதவி கால்நடை மருத்துவர் மோகன், துப்புரவு ஆய்வாளர் கண்ணன் மற்றும் பணி மேற்பார்வையாளர்கள், கால்நடை பராமரிப்பு அலுவலர்கள் ஆகியோர் கொண்ட குழுவினரால் நேற்று 30 தெரு நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி போடப்பட்டது.

மேலும் இதுபோன்ற சிறப்பு முகாம்கள் நகராட்சி பகுதியில் தொடர்ந்து நடைபெறும். அதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொண்டு தங்களது செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல் சோளிங்கர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் சுமார் 250க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. ஒவ்வொரு தெருக்களிலும் சுமார் 5 முதல் 10 தெரு நாய்கள் வரை சுற்றித்திரிகிறது. தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களால், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அச்சத்தில் உள்ளனர்.

மேலும், இரவு நேரங்களில் தெருக்களில் நடமாட முடியவில்லை என்றும், இரு சக்கர வாகனங்களில் செல்வோரை துரத்துவதால் விபத்து ஏற்படுவதாகவும் பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தனர்.

எனவே நகராட்சி சுகாதார ஆய்வாளர் தேவிபாலா தலைமையில் கால்நடை மருத்துவர் அருள்மொழி மற்றும் நகராட்சி பணியாளர்கள் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணியில் நேற்று ஈடுபட்டனர். கோளாத்தம்மன் கோவில், அண்ணா நகர், வட்டார வளர்ச்சி அலுவலகம், வாரச்சந்தை, பஜார் தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தெரு நாய்களை பிடித்து ரேபிஸ் தடுப்பூசி செலுத்தினர்.

இதுவரை 59 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 323 தெரு நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாகவும், தொடர்ந்து நகராட்சியில் உள்ள அனைத்து தெரு நாய்களுக்கும் ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

ரேபிஸ் நோயின் முக்கிய அறிகுறிகள்

நாய் காரணமே இல்லாமல் கடிப்பது, வாயில் இருந்து அதிகளவில் எச்சில் வடிதல், தண்ணீர் மற்றும் வெளிச்சத்தை கண்டு பயந்து ஓடுதல், வழக்கத்திற்கு மாறான சத்தம் எழுப்புதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அந்த நாய்க்கு ரேபிஸ் வெறிநோய் தாக்கியுள்ளதற்கு முக்கிய அறிகுறிகளாகும்.

மனிதர்களுக்கு நாய் கடித்த இடத்தில் அரிப்பு அல்லது எரிச்சல் ஏற்படுதல், காய்ச்சல், தலைவலி, நரம்புத்தளர்ச்சி மற்றும் ஹைட்ரோபோபியா எனப்படும் தண்ணீரை பார்த்தால் பயப்படும் நிலை போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

ரேபிஸ் அறிகுறி மனிதர்களுக்கோ அல்லது விலங்குகளுக்கோ தோன்றிவிட்டால், அதை குணப்படுத்துவது கடினம். எனவே, அறிகுறி தோன்றும் முன்பே நாய் கடித்த உடனே ஊசி போடுவது மட்டுமே உயிரைக் காக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

நாய் கடித்தால் உடனே என்ன செய்ய வேண்டும்

நாய் கடித்தால் அந்த இடத்தை உடனடியாக ஓடும் குழாய் நீரில் சாதாரண துணி துவைக்கும் சோப்பு அல்லது குளியல் சோப்பு போட்டு 15 நிமிடங்கள் நன்றாக கழுவ வேண்டும். இது கிருமிகளை 70 சதவீதம் வரை அழிக்கும். கடித்த காயத்தின் மீது காபி தூள், மஞ்சள், சுண்ணாம்பு அல்லது எண்ணெய் போன்றவற்றை வைக்கவே கூடாது. இது கிருமித்தொற்றை அதிகமாக்கும். நாய் கடித்த காயத்தை துணியால் இறுக்கமாக கட்டக்கூடாது. காயம் திறந்தே இருக்க வேண்டும்.

கீறல் விழுந்தாலும் தடுப்பூசி அவசியம்

மருத்துவர்கள் கூறுகையில், ‘நாய் கடித்தவுடன் அது வளர்ப்பு நாயோ அல்லது தெருநாயோ அலட்சியமாக இருக்காமல், 24 மணி நேரத்திற்குள் அரசு மருத்துவமனைக்கு சென்று ரேபிஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மருத்துவர் பரிந்துரைக்கும் அனைத்து தவணை ஊசிகளையும் குறிப்பிட்ட தேதிகளில் தவறாமல் போட வேண்டும். ஊசி போடுவதை பாதியில் நிறுத்தக் கூடாது. நாய் பற்களால் லேசாக கீறல் விழுந்தால் கூட மருத்துவரிடம் காட்டி ஊசி போடுவது பாதுகாப்பானது’ என்றனர்.

பூனை, குரங்கு கடித்தாலும் ரேபிஸ்

நாய்கள் மட்டுமல்லாமல், பூனைகள் கடித்தாலோ அல்லது நகத்தால் கீறினாலோ கூட ரேபிஸ் பரவ வாய்ப்புள்ளது. அதேபோல் குரங்கு, நரி, அணில் போன்ற பாலூட்டி விலங்குகள் கடித்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகி ரேபிஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகளுக்கும் 3 மாத வயதிற்கு மேல் ரேபிஸ் தடுப்பூசி போடுவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

Related Stories: