தமிழ்நாட்டின் பெரிய அணைகளில் ஒன்றான சாத்தனூர் அணையில் பிளாஸ்டிக் கழிவுகளால் நிரம்பிய சிவன்குளம், தாமரைக்குளம்

* பராமரிப்பின்றி காட்சியளிக்கும் அவலம்

* சீரமைக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை

தண்டராம்பட்டு : திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் உள்ள சிவன்குளம், தாமரைக்குளம் முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் நிரம்பி பராமரிப்பின்றி காட்சியளிக்கிறது. இதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாத்தனூர் அணை தமிழ்நாட்டின் மிக முக்கியமான மற்றும் பெரிய அணைகளில் ஒன்றாகும். திருவண்ணாமலை மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாகவும் இந்த அணை விளங்குகிறது. பொன்விழா கண்ட இந்த அணை 119 அடி உயரம் கொண்டது. இதன் நீர் கொள்ளளவு 7,321 மில்லியன் கன அடியாகும்.

திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களின் விவசாய நிலங்களுக்கு இதுமுக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. சாத்தனூர் அணையில் அமைந்துள்ள அழகிய பூங்காக்கள், படகுசவாரி, குளங்கள் மற்றும் ஆசியாவிலேயே மிகப்பெரிய முதலைப்பண்ணை ஆகியவற்றை உள்ளன.

இந்த முதலைபண்ணையில் நூற்றுக்கும் மேற்பட்ட முதலைகள் வளர்ந்து வருகின்றன. இதைபார்க்க விடுமுறை நாட்களில் அதிகளவில் சுற்றலா பயணிகள் திரளுவார்கள். இதை திரளான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். மேலும் மீன் காட்சியகம் உள்ளது. இங்கு பல்வேறு வகையான மீன்களை கண்டுகளிக்கலாம்.

சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் உணவருந்தி மகிழ்ந்து செல்கின்றனர். அதன்படி நேற்று விடுமுறை தினம் என்பதனால் சாத்தனூர் அணையில் உள்ள ஆதாம் ஏவாள் பூங்கா, தொங்கு பாலம், ராக் பார்க் சிறுவர் பூங்கா, வீரமங்கை பார்க், தாமரைக் குளம், முதலைப்பண்ணை, மயில் கூண்டு, பறவைகள் கூண்டு, படகு குளம், சிவன் பார்க் டைனோசர் பார்க் உள்ளிட்ட இடங்களை சுற்றுலா பயணிகள் சுற்றிப் பார்த்து மகிழ்ந்தனர்.

அணையில் நீச்சல் குளம் அருகில் உள்ள குளத்தில் சுற்றுலாப் பயணிகள் வீசி சென்ற பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் குளத்தில் குவிந்துள்ளது. குளம் முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளது.

குடிநீர் கேன்கள் குளத்தில் மிதக்கின்றது.பிளாஸ்டிக் கழிவுகள் நிரம்பி இருப்பதால் பாசி படர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மூக்கை மூடியபடியும், முகத்தை சுளித்தபடியும் செல்கின்றனர். கடந்த சில நாட்களாக குளங்கள் சீரமைக்காததால் அப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதில்லையாம்.

இதை பூங்கா பராமரிப்பாளர்கள் கவனிக்காமல் அலட்சியமாக செயல்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததுள்ளது. அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் சிலர் தேவையற்ற குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்களை குளங்கள் மற்றும் அணையிலேயே போடுகின்றனர்.இதை எச்சரிக்கை செய்வதற்கும் அங்கு யாரும் இல்லை என கூறப்படுகிறது.

பிரசித்தி பெற்ற சாத்தனூர் அணை பூங்காவில் இதுபோன்று குளங்கள் இருப்பதால், பராமரிப்பின்றி காட்சியளிப்பதாலும் சாத்தனூர் அணை அதன்பொழிவு தன்மையை இழக்கும் ஆபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அணையில் உள்ள சிவன் குளம், தாமரைக்குளத்தை தூர்வாரி புதியதாக குளத்தில் தண்ணீர் விட வேண்டும் என்றும் பூங்காக்களில் குப்பைகள் இன்றி பராமரிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

87.60 அடியாக நீர்மட்டம் உயர்வு

சாத்தனூர் அணை முழு கொள்ளளவு எட்டியதனால் விவசாய பாசனத்திற்காக திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மாவட்ட விவசாயிகள் திறந்துவிட கோரிக்கை வைத்தனர். அதன்படி விவசாய பாசனத்திற்காக தொடர்ந்து 100 நாட்கள் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதனால் சாத்தனூர் அணை 70 அடியாக குறைந்தது. தற்போது கிருஷ்ணகிரி கேஆர்எஸ் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் நேற்று 87.60அடியாக நீர்மட்டம் உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: