ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரிமலையில் படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

*வார விடுமுறையால் திரண்டனர்

திருப்பத்தூர் : ஏலகிரி மலையில் வார விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் திரண்டு படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. ஏழைகளின் ஊட்டி என்றுஅழைக்கப்படும் ஏலகிரி மலை நான்கு புறமும் மலைகளால் சூழப்பட்டுள்ளது.

ஏலகிரி மலை அடிவாரத்தில் இருந்து 14 கொண்ட ஊசி வளைவுகளையும், 14 சிறிய கிராமங்களை உள்ளடக்கி தனி ஊராட்சியாகவும் செயல்பட்டு வருகிறது. எந்த காலத்திலும் ஒரே மாதிரியான சீதோஷ்ண நிலை நிலவுவதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

மேலும் இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் படகு துறை சிறுவர் பூங்கா, இயற்கை பூங்கா, நிலாவூர் கதவநாச்சி அம்மன் கோயில், அத்தனாவூர் முருகன் கோயில், மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்குக்கூடங்கள் உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து பல்வேறு இடங்களை கண்டு ரசித்து செல்கின்றனர்.

இந்நிலையில் சனி, ஞாயிறு வார விடுமுறையால் ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. இதனால் ஏலகிரியில் உள்ள தங்கும் விடுதிகள் சுற்றுலா பயணிகளால் நிரம்பியிருந்தது.

ஞாயிற்றுக்கிழமையான நேற்று மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏலகிரி சுற்றுலா தளத்தில் திரண்டனர். இங்குள்ள பல்வேறு பொழுதுபோக்கு கூடங்களை கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.

குறிப்பாக புங்கனூர் படகு துறையில் குடும்பத்துடன் படகில் சவாரி செய்து மகிழ்ந்தும், சிறுவர் பூங்காவில் உள்ள பொழுதுபோக்கு கூடங்களில் பொழுது போக்கியும், பிடித்த பொருட்கள் உணவுகள் போன்றவை வாங்கியும் மகிழ்ந்தனர்.

மேலும் விடுமுறையில் சுற்றுலாப் பயணிகள் அதிகரிப்பால் ஏலகிரி மலை போலீசார் போக்குவரத்து சீரமைப்பது சமூகவிரோதிகளை கண்காணிப்பது பொதுமக்களின் பாதுகாப்பு போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.

Related Stories: