செங்கை அரசு சிறார் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து வெளியேறி 3 பேரை தாக்கி பைக்குகளை பறித்து 12 பேர் தப்பியோட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே ஆத்தூர் பழத்தோட்டம் பகுதியில், காஞ்சிபுரம்-செங்கல்பட்டு நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள அரசு சார்பில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிறார்களின் பாதுகாப்பு இல்லம் மற்றும் பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இப்பயிற்சி நிலையத்தில் 18 முதல் 21 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு பேக்கரி தொழில் உள்பட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இப்பாதுகாப்பு இல்லத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 72 சிறுவர்கள் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், இப்பாதுகாப்பு இல்லத்தில் உள்ள பயிற்சி நிலையத்தில் இருந்த சிறுவர்களுக்கு நேற்றிரவு ஒரு காவலர் உணவளிக்க சென்றுள்ளார். அப்போது அவரை 10க்கும் மேற்பட்ட சிறுவர்கள் ஒன்றுசேர்ந்து சரமாரி தாக்கியுள்ளனர். பின்னர் அவருடன் பாதுகாப்பு நுழைவு வாயிலுக்கு வந்து, அங்கிருந்த கேட்கீப்பர் ஏழுமலையிடம் இருந்து பிரதான கதவின் சாவியை பறித்தனர். இதைத் தொடர்ந்து, காவலரை தாக்கிய 12 சிறுவர்களும் பாதுகாப்பு இல்லத்திலிருந்து வெளியேறி தப்பியோடி விட்டனர். பாதுகாப்பு இல்ல பிரதான கதவை திறந்து வெளியேறிய 12 பேரும், காவூர் பகுதியை சேர்ந்த பழனி, சாத்தனாஞ்சேரி சோலையப்பன், மாடம்பாக்கம் ஆரோக்கியசாமி ஆகிய 3 பேரை சரமாரி தாக்கினர்.

பின்னர் அந்த 3 பேரின் பைக்குகளை பறித்துக்கொண்டு, ஒரு பைக்கில் 4 பேர் வீதம் 3 பைக்குகளில் 12 பேரும் தப்பி சென்றனர். இவர்களில் பாதிப்பேர் காஞ்சிபுரம் சாலை மார்க்கமாகவும் மீதிப்பேர் செங்கல்பட்டு சாலை மார்க்கமாகவும் தப்பி சென்றதாக பாதிக்கப்பட்டவர்கள் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் செங்கல்பட்டு தாலுகா போலீசார் விரைந்து வந்தனர். அங்கு 12 சிறுவர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த ஊழியரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ததனர். மேலும், பாதுகாப்பு இல்லத்திலிருந்து தப்பி சென்ற 12 பேரையும் மடக்கி பிடிக்கும் பணிகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், அப்பாதுகாப்பு மையத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Related Stories: