இளம்பெண் கூட்டு பலாத்காரம்: சிறுவன் உள்பட 5 பேர் கைது

 

மேலூர்: வேலை தருவதாக அழைத்து வந்து இளம்பெண்ணை கூட்டுப் பலாத்காரம் செய்தது தொடர்பாக சிறுவன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம், திருச்சுழி பகுதியைச் சேர்ந்தவர் 33 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி மகன், மகள் உள்ளனர். இந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, இளம்பெண் கணவனை பிரிந்து தனியாக வசிப்பதுடன், கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இவரது வீடு அருகே வசிக்கும் பெண் ஒருவர், மதுரை மாவட்டம் மேலூரில் வசிக்கும் மூதாட்டியை கவனித்துக்கொள்ள ஆள் தேவைப்படுவதாக இளம்பெண்ணிடம் கூறியுள்ளார். இந்த வேலைக்கு செல்ல இளம்பெண் சம்மதிக்க, அவர் தொடர்பு ெகாள்வதற்கான செல்போன் நம்பரை அந்தப் பெண் கொடுத்துள்ளார்.

அதில் பேசிய நபர் அழைத்ததன் பேரில், நேற்று முன்தினம் மாலை மேலூருக்கு வந்த இளம்பெண்ணை 18 வயது வாலிபர் ஒருவர் டூவீலரில் ஏற்றி தும்பைப்பட்டி அருகே, தாமரைப்பட்டியில் உள்ள கண்மாய் கரைக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்த 4 பேரிடம் இளம்பெண்ணை ஒப்படைத்த வாலிபர் புறப்பட்டுச் சென்றார். அவர்கள் நால்வரும் சேர்ந்து, இளம்பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அவர் அணிந்திருந்த அரை பவுன் தங்கச்சங்கிலி, தங்கக்குண்டு, வெள்ளிக்கொலுசு மற்றும் செல்போன், மணிபர்ஸ் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பினர். கையில் காசில்லாதால் அங்கிருந்து மேலூர் வரை இளம்பெண் நடந்தே வந்துள்ளார்.

பின்னர் மேலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். இதில், இளம்பெண்ணை டூவீலரில் அழைத்து வந்தது தாமரைப்பட்டியைச் சேர்ந்த 18 வயது சிறுவன் என்றும், கூட்டுப் பலாத்காரம் செய்தது தாமரைப்பட்டியைச் சேர்ந்த வினீத் (21), செல்வக்குமார் (33), அரவிந்த் (26), வீரபாண்டி (30) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து சிறுவன் உள்பட 5 பேரையும் மகளிர் போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். இது தொடர்பாக அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கூட்டு பலாத்கார சம்பவம், மேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: