பாடாலூர்: பெரம்பலூர் அருகே அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா சிறுகன்பூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி இயங்கி வருகிறது. இங்கு கடந்த 10 ஆண்டுகளாக சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த காட்டுராஜா (55) ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களாக தலைமை ஆசிரியராகவும் (பொ) பணியாற்றி வருகிறார்.
இவர் அந்த பள்ளியில் 7 மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் மாணவிகளிடம் தவறான அர்த்தத்தில் பேசுவதுடன், உடலை தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் பெற்றோரிடம் கூறினர். பெற்றோர்கள் பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த தகவலின் பேரில் பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் ராஜூவ்காந்தி தலைமையிலான குழுவினர் மற்றும் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொ) இந்திரா ஆகியோர் நேற்றுமுன்தினம் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று அங்கு தலைமை ஆசிரியர் காட்டுராஜாவிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவிகளிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், தலைமை ஆசிரியர் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதுகுறித்து மகளிர் போாலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து காட்டுராஜாவை நேற்று கைது செய்தனர்.
