நெல்லை இரட்டை கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி இன்று சுட்டுப் பிடிப்பு: போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு

 

நெல்லை: வீரவநல்லூர் அருகே நடந்த இரட்டை கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை இன்று அதிகாலை போலீசார் சுட்டு பிடித்தனர். இந்த சம்பவத்தில் போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மூலச்சி வடக்கு தெருவைச் சேர்ந்த பெருமாள்பாண்டியன். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சித்திரபுத்திரன் குடும்பத்தினருக்கும் இடையே கடந்த 2007ம் ஆண்டு பொதுக்குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் தொடர்பாக இருதரப்பை சேர்ந்த சுப்பிரமணியன், சுப்பையா, சின்னதம்பி, பெருமாள், பாபநாசம், குமார் மற்றும் பெருமாள்பாண்டியன் என 7 பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக கடந்த 2ம்தேதி சித்திரைபுத்திரனின் மற்றொரு மகனான காளிமுத்து (40), அவரது மகன்கள் சின்னத்துரை (15), ஜெயராஜ் (5) ஆகியோருடன், வீரவநல்லூரை அடுத்த மாதுடையார்குளம் ரோட்டில் பைக்கில் சென்ற போது எதிர்த்தரப்பினரால் காரால் மோதி காளிமுத்து, ஜெயராஜ் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். படுகாயம் அடைந்த சின்னத்துரை, நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த இரட்டைக்கொலை தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், மகேந்திரன் என்ற மகேஷ்குமார் (29), குமார் என்ற கொக்கிகுமார் (23), முத்துச்செல்வன் (29), குருநாதன் மகன்கள் மணிகண்டன் (30), கிருஷ்ணன் (29), மகேஷ் என்ற மாடசாமி (36), அவரது மனைவி விஜயா (37), முத்துப்பட்டன் என்ற பட்டுராஜா (20), மகாலிங்கம் (24), ராஜதுரை (30) மற்றும் 17 வயது இளஞ்சிறார் என 11 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில் காளிமுத்துவின் குடும்பத்தினருடன் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் 7 நாட்கள் கழித்து நேற்று காளிமுத்து, ஜெயராஜின் உடல்களை பெற்று கொண்ட அவரது உறவினர்கள் மூலச்சி பகுதியில் இருவரது உடல்களையும் அடக்கம் செய்தனர். இதற்கிடையில் இரட்டை கொலையில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியான மூலச்சியை சேர்ந்த ராசையா மகன் சுபாஷ் (26) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சுபாஷ் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரகப் பாதிப்பு காரணமாக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றொரு குற்றவாளியான மூலச்சி பெருமாள்பாண்டியன் மகன் மணி (எ) மணிமாறன் (20) என்பவர் நேற்று சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ஏற்கனவே கொலையுண்ட சுப்பையா என்பவரது மகன் கிருஷ்ணன் (எ) அஜித் (28) இன்று அதிகாலை தெற்கு வீரவநல்லூர் 80 அடி கால்வாய் பகுதியில் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து எஸ்.ஐ சினேகாந்த் தலைமையிலான தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பதுங்கியிருந்த கிருஷ்ணனை மடக்கி பிடிக்க முயன்றனர். அப்போது கிருஷ்ணன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் போலீசாரை வெட்டினார். இதில் போலீஸ்காரர் பரமசிவன் என்பவருக்கு இடது கையில் வெட்டு விழுந்தது. இதனையடுத்து தற்காப்புக்காகவும், குற்றவாளியைக் கட்டுப்படுத்தவும் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் கிருஷ்ணன் காலில் குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தார்.

அதனைத்தொடர்ந்து காயமடைந்த கிருஷ்ணன், போலீஸ்காரர் பரமசிவன் ஆகியோரை போலீசார் மீட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தொடர் கைது நடவடிக்கைகளின் மூலம், வீரவநல்லூர் இரட்டை கொலை வழக்கில் இதுவரை மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரட்டை கொலை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியை போலீசார் சுட்டுப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீஸ்காரருக்கு எஸ்பி ஆறுதல்
வீரவநல்லூர் இரட்டை கொலை சம்பவத்தில் கிருஷ்ணன் (எ) அஜித்தை தனிப்படை போலீசார் பிடிக்க முயன்ற போது அவர், அரிவாளால் வெட்டியதில் போலீஸ்காரர் பரமசிவன் காயமடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை இன்று அதிகாலை நெல்லை மாவட்ட எஸ்பி விஸ்வேஷ் சாஸ்திரி நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்து ஆறுதல் கூறியதோடு, நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.

Related Stories: