அனல் மின் நிலைய ஒப்பந்ததாரரிடம் ரூ.1 கோடி பணம் கேட்டு மிரட்டல்; சென்னையில் பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் துப்பாக்கி முனையில் கைது

 

*கள்ளத்துப்பாக்கி, சொகுசு கார் ஒன்றும் போலீசார் பறிமுதல்

சென்னை: அனல் மின் நிலைய ஒப்பந்ததாரரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரின் படி பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரனை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அவனிடம் இருந்து ஒரு கள்ளத்துப்பாக்கி மற்றும் சொகுசு கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னையில் ஏ பிளஸ் ரவுடிகளில் ஒருவராக பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் உள்ளார். இவர் கடந்த 2004ம் ஆண்டு காளீஸ்வரன் என்ற காளியை வெட்டி கொலை செய்தார். அதன் பிறகு 2005ம் ஆண்டு பெரியமுத்து என்பவரை கொன்றார். 2009ம் ஆண்டு ரவுடி அசோக் கொலை என 9 கொலைகள், கட்டப்பஞ்சாயத்து, ஆள்கடத்தல் உட்பட 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த 2018ம் ஆண்டு எண்ணூர் அனல் மின் நிலைய ஒப்பந்ததாரர் ஜேம்ஸ் என்பவர் கொலை வழக்கிலும் ரவுடி எண்ணூர் தனசேகரன் முக்கிய குற்றவாளியாக உள்ளார்.

இவர் எண்ணூர் பகுதியை சுற்றியுள்ள தொழிற்சாலைகள் மற்றும் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இதனால் எண்ணூர் தனசேகரனை சென்னை காவல்துறை 5 முறை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது சிறையில் அடைத்துள்ளனர். இதுதவிர கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் துணை ஜெயிலர் மணிகண்டன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் தடத்திய வழக்கில் தொடர்புடையவர். இதற்கிடையே ரவுடி எண்ணூர் தனசேகரன் சென்னை போலீஸ் கமிஷனராக அருண் இருந்த போது, ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏ பிளஸ் ரவுடிகள் சிலர் என்கவுன்டரும் செய்யப்பட்டது. அப்போது தன்னையும் போலீசார் என்கவுன்டர் செய்து விடுவார்கள் என்று தனது மகளுடன் காவல்துறை தலைமை அலுவலகத்தில் தான் திருந்தி வாழ வாய்ப்பு கொடுங்கள் என்று மனு அளித்திருந்தார்.

அதன் பிறகு தன்னை போலீசார் கைது செய்துவிடுவார்கள் என்று அச்சத்தில் தொடர்ந்து ஆந்திராவில் தலைமறைவாக இருந்து வந்தார். சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த அருண் மாற்றப்பட்ட பிறகு தமிழகத்திற்குள் மீண்டும் வந்தார் தனசேகரன். இந்நிலையில் வடசென்னையில் உள்ள அனல் மின் நிலையத்தில் ஸ்டேஜ்-4 ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர் ஒருவரிடம் ரூ.1 கோடி பணம் கேட்டு பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் மிரட்டியுள்ளார். பணம் கொடுக்கவில்லை என்றால் கொலை செய்துவிடுவேன் என்று தனது ஆதரவாளர்களான மணவாளன் மற்றும் தமிழன்பன் ஆகியோர் மூலம் மிரட்டியுள்ளார்.

இதனால் அச்சமடைந்த ஒப்பந்ததாரர் ஆவடி மாநகர காவல் ஆணையர் செந்தில் குமாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் படி காட்டூர் போலீசார் கொலை மிரட்டல் உட்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் ரவுடி எண்ணூர் தனசேகரனை கைது செய்ய செங்குன்றம் துணை கமிஷனர் மகேஸ்வரி தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை தீவிர தேடுதல் வேட்டையில், ரவுடி எண்ணூர் தனசேகரன் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பதுங்கி இருப்பதாக தெரியவந்தது. அதைதொடர்ந்து தனிப்படையினர் இன்று அதிகாலை பிரபல ஓட்டலில் புகுந்து துப்பாக்கி முனையில் ரவுடி எண்ணூர் தனசேகரனை கைது செய்தனர்.

அவனுடன் தங்கியிருந்த கூட்டாளிகளான மணவாளன், தமிழன்பன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவனிடம் இருந்து கள்ளத்துப்பாக்கி ஒன்றும், சொகுசு கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. 9 கொலை உட்பட 50க்கும் மேற்பட்ட வழக்கில் தொடர்புடைய ரவுடி எண்ணூர் தனசேகரனை ஆவடி மாநகர போலீசார் சென்னை மாநகர காவல் எல்லையில் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: