ஆத்தூர்: சேலம் மாவட்டம் தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வெள்ளையூர் மேற்குகாடு பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் (56). இவர், சேலம் கிழக்கு மாவட்ட திமுகவில் பிரதிநிதியாக இருந்து வந்தார். இவரது முதல் மனைவி பொன்மலர். இவர்களுக்கு உதயபிரகாஷ், சூரியபிரகாஷ் என்ற மகன்கள் உள்ளனர். சில வருடங்களுக்கு முன்பு பொன்மலர் இறந்த நிலையில், மாணிக்கம் இரண்டாவதாக இந்திரா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு செல்வபிரகாஷ் என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மாணிக்கம் வீட்டுக்கு வெளியில் கட்டிலில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். மனைவி இந்திரா, மகன் உதயபிரகாஷ் ஆகியோர் வீட்டுக்குள் தூங்கி கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை எழுந்த இந்திரா வீட்டின் கதவை திறந்தபோது, வெளியில் மாணிக்கம் உடலில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். தகவலறிந்து வீரகனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அப்போது அவரது குடும்பத்தினர் கொலையாளிகளை கைது செய்யும் வரை சடலத்தை பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்க மாட்டோம் எனக்கூறி கையெழுத்திட மறுத்தனர். கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று மாலை ஆத்தூர் அடுத்த புளியங்குறிச்சியைச் சேர்ந்த மஞ்சப்பன் மகனான கம்பி கட்டும் தொழிலாளி ராஜ்குமார் (28), ஆத்தூர் 2வது குற்றவியல் நீதிமன்றத்தில் மாணிக்கத்தை வெட்டி கொலை செய்ததாக தெரிவித்து, நீதிபதி முன் சரணடைந்தார்.
அப்போது அவர் கூறியதாவது: எனது தங்கை மணிமொழியின் கணவர் அருண்குமார். அவர், மாணிக்கத்தின் பக்கத்து நிலத்தை சேர்ந்தவர். நிலம் தொடர்பாக மணிமொழிக்கும், மாணிக்கத்திற்கும் அடிக்கடி தகராறு வந்துள்ளது. அப்போதெல்லாம், மாணிக்கம் மணிமொழியை தகாத வார்த்தையில் பேசி வந்துள்ளார். இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டு, அவர் தூங்கி கொண்டிருந்தபோது அரிவாளால் வெட்டி கொன்றதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். சரணடைந்த ராஜ்குமாரின் சகோதரர் இளையராஜா (32), கடந்த ஏப்ரல் மாதம் அங்குள்ள பஸ் ஸ்டாண்டில் படுத்திருந்த மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
