கஞ்சா வியாபாரிகளை கைது செய்யக் கோரி பெண், குழந்தைகள் உள்பட 4 பேர் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி

*ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடி கிழக்குத் தெருவை சேர்ந்தவர் ஆயிஷா பீவி (45). நேற்று இவர், தனது தம்பி ஜலில் (40), 17 வயது மகன், 11 வயது மகள் ஆகிய 4 பேருடன் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிப்பதற்காக வந்தார்.

கூட்டரங்கு நுழைவாயில் பகுதியில் நான்கு பேரும், தாங்கள் மறைத்து கேனில் கொண்டு வந்திருந்த பெட்ரோலை திடீரென எடுத்து உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு போலீசார், அவர்களை தடுத்து தண்ணீர் ஊற்றி மீட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து நால்வரையும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆயிஷா பீவி கூறுகையில், ‘‘திருப்பாலைக்குடியில் உள்ளூரைச் சேர்ந்த கும்பல் ஒன்று கஞ்சா வியாபாரம் செய்து வருகிறது. இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. நாங்கள் தான் புகார் தெரிவித்தோம் எனக்கூறி அந்த கும்பல் எங்களை தொடர்ந்து மிரட்டல் விடுத்தும், இரும்பு கம்பியால் தாக்கியும் வருகிறது.

இதனால் தம்பி ஜலில் மனைவிக்கு தலையில் காயம் ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீஸில் புகார் அளித்தோம், ஆனால் எங்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. கஞ்சா கும்பலை கைது செய்ய கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

போலீசாரிடம் கேட்டபோது, ‘‘ஜூலை 2ம் தேதி ஜலில், அவரது மனைவி ரேஸ்மா பானு தரப்பிற்கும், அருகில் உள்ள மற்றொரு தரப்பிற்கும் அடிதடி சண்டை நடந்துள்ளது.

இதில் இரண்டு தரப்பிற்கும் காயம் ஏற்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இரண்டு தரப்பில் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் ஜூலை 3ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முன்விரோதத்தால் நடந்த நிகழ்வு’’ என்றனர்.

Related Stories: