மும்பை: திரைப்படத்துறையில் குழந்தை பெற்ற தாய்மார்களின் பணி நேரத்தை முறைப்படுத்த வேண்டும் என்ற விவாதத்திற்கு நடிகை காஜல் அகர்வால் ஆதரவு தெரிவித்துள்ளார். திரைப்படப்பிடிப்பில் குழந்தை பெற்ற புதிய தாய்மார்களுக்கான பணி நேரத்தை எட்டு மணி நேரமாக குறைக்க வேண்டும் என்று நடிகை தீபிகா படுகோனே எழுப்பிய கோரிக்கை, திரைத்துறையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. ‘ஸ்பிரிட்’ மற்றும் ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் அடுத்த பாகத்தில் இருந்து தீபிகா படுகோனே விலகியதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து இந்த விவாதம் தீவிரமடைந்தது.
இந்நிலையில், தீபிகா படுகோனேவின் இந்த நியாயமான கோரிக்கைக்கு நடிகை காஜல் அகர்வால் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். கார்ப்பரேட் நிறுவனங்களைப் போல திரைத்துறையிலும் பணி நேரக் கொள்கைகள் அமல்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து காஜல் அகர்வால் அளித்த பேட்டியில், தன் குழந்தைப் பேற்றுக்குப் பிறகு, தானும் தனது ஒப்பந்தங்களில் பணி நேரத்தை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அவர் பேசுகையில், ‘தீபிகா படுகோனேவின் எட்டு மணி நேர வேலை கோரிக்கையை நானும் ஆதரிக்கிறேன். கார்ப்பரேட் துறையில் இருப்பது போன்ற பணி நடைமுறைகள் ஏன் திரைப்படத்துறையில் இல்லை என்பது புரியவில்லை. தற்போதைய சூழலில் திரைத்துறையில் சில மாற்றங்கள் நடந்து வருகின்றன. நான் எனது ஒப்பந்தத்தில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை மற்றும் குறிப்பிட்ட பணி நேரத்தை மட்டுமே நிபந்தனையாகச் சேர்த்துள்ளேன். இதன் மூலம் எனது குழந்தையுடன் நேரத்தைச் செலவிட முடிகிறது. முன்பு போல் என்னால் தொடர்ந்து 24 மணி நேரமும் உழைக்க முடியாது. தாய்மையையும் எனது கலைப் பயணத்தையும் சமநிலையில் கொண்டு செல்வதே எனது தற்போதைய விருப்பம்’ என்று கூறினார்.
