விருத்தாசலம்: தவெக நிர்வாகி பரிந்துரைப்பவருக்கு மட்டுமே 100 நாள் வேலை வழங்கப்படுவதாக கூறி விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை 100 நாள் வேலை திட்ட பயனாளிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள கோ.பவழங்குடி ஊராட்சியில் கடந்த 6 மாதங்களாக ஒரு பகுதி மக்களுக்கு மட்டும் 100 நாள் வேலை வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனால் மற்றொரு பகுதி மக்கள் வேலையில்லாமல் தவித்து வந்தனர். அவர்கள், மக்கள் நலப் பணியாளர் மற்றும் ஊராட்சி செயலாளரிடம் கேட்டபோது தற்போது ஆளுங்கட்சியாக (தவெக) உள்ள நிர்வாகிகள் சொல்லும் நபர்களுக்கு மட்டும் தான் வேலை வழங்க வாய்மொழி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அதனை மீறி எங்களால் யாருக்கும் வேலை வழங்க முடியாது என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
நேற்றும் இதேபோல் கூறி சுமார் 50க்கும் மேற்பட்ட மக்களை 100 நாள் வேலை திட்டத்திலிருந்து வெளியேற்றி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பயனாளிகள் நேற்று தங்களது அடையாள அட்டையுடன் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
