தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே 7 வயது மனவளர்ச்சி குன்றிய சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சாவூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பாபநாசம் அருகே மேலசெம்மங்குடியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மகன் அஜய்(31). இவர் பாபநாசம் பகுதியைச் சேர்ந்த 7 வயது மனவளர்ச்சி குன்றிய சிறுமியிடம் 5.6.2025 அன்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில், பாபநாசம் அனைத்து மகளிர் போலீசார் 9.6.2025 அன்று அஜயை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அஜய் குண்டர் தடுப்பு காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இவ்வழக்கு தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தமிழரசி, குற்றம்சாட்டப்பட்ட அஜய்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், கட்டத் தவறினால் மேலும் ஒன்றரை வருடம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.
