போலீசில் புகார் கொடுத்த தந்தை, மகனுக்கு சரமாரி வெட்டு

திருவெறும்பூர்: திருச்சியில் இடப்பிரச்னை தொடர்பாக போலீசில் புகார் கொடுத்த தந்தை, மகனை அரிவாளால் சரமாரி வெட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகாவை சேர்ந்தவர் வேல்முருகன்(51). இவரது குடும்பத்திற்கும், அவரது வீட்டின் அருகே உள்ள தீக்குச்சி பாலு(எ)பால்ராஜ் குடும்பத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக இட பிரச்னை இருந்து வருகிறது. இது சம்பந்தமாக மாத்தூர் போலீசில் வழக்கு உள்ளது.

இந்நிலையில் நேற்று வேல்முருகன் குடும்பத்திற்கும் பால்ராஜ் குடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வேல்முருகன் எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். அதன் நகலை மாத்தூர் போலீசில் அளிக்கும்படி எஸ்.பி அலுவலகத்தில் அறிவுறுத்தினர். இதையடுத்து வேல்முருகன் மகன் பாலகிருஷ்ணனுடன்(27) மாத்தூர் போலீசில் புகார் கொடுக்க வந்தார். அப்போது பால்ராஜ் தரப்பினரும் மனு கொடுக்க வந்தனர்.

இந்நிலையில் இருதரப்பினரும் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களின் நகலை போலீசார் கேட்டனர். இதையடுத்து வேல்முருகன், மகனுடன் காரில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் எதிரே உள்ள ஜெராக்ஸ் கடையில் ஜெராக்ஸ் எடுத்துவிட்டு மீண்டும் போலீஸ் நிலையத்துக்கு புறப்பட்டனர். அப்போது, அங்கு பைக்கில் வந்த பால்ராஜ், அவரது மகன் அய்யாவு(30) மற்றும் ஸ்டுடியோ வைத்திருக்கும் மதன் ஆகியோர் சேர்ந்து வேல்முருகனின் கார் கண்ணாடியை உடைத்ததுடன், தந்தை மகனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அப்பகுதியினர் மீட்டு அவர்களது காரிலேயே ஏற்றி திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் நவல்பட்டு போலீசார் வழக்கு பதிந்து அய்யாவுவை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய மதன், பால்ராஜை தேடி வருகின்றனர்.

Related Stories: